Wednesday, January 13, 2016

மென்பொருள் விடுதலை விழா

ஒவ்வொரு நாடும், பிற நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற நாளை
ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடுவர்.


ஆனால், இது என்ன மென்பொருள் விடுதலை விழா? மென்பொருள் துறையில் கூட
அடிமைத்தனம், ஆதிக்கம் போன்றவை உண்டா? ஆமாம். நம் எல்லோரையும் பல்வேறு
பெரு நிறுவனங்கள் தமது மென்பொருள் வழியே அடிமையாக்கி வருகின்றன.

நாம் பணம் கொடுத்து வாங்கும் பொருட்கள் யாவும் நம்முடையவை தானே. நீங்கள்
வாங்கும் ஒரு வாகனத்தை எங்கு வேண்டுமானாலும் ஓட்டிக்கொண்டு
போகலாம்.அதைக்கொண்டு அலுவலகம் மட்டும்தான் போக வேண்டும்.
கடைத்தெருவிற்கோ, கடற்கரைக்கோ, உறவினர் வீட்டுக்கோ போகக்கூடாது என்று
யாரும் கட்டுப்படுத்த முடியாது.

ஆனால், மென்பொருள் உலகில் Home Edition, Academic Edition, Professional
Edition என ஒவ்வொரு வகைப் பயன்பாட்டுக்கும் தனி வெளியீடு. தனி விலை.
கல்லூரியில் பயன்படுத்தும் ஒரு மென்பொருளை வீட்டுக்குக் கொண்டுவரக்
கூடாது. நீங்கள் போகும் இடங்களுக்கேற்ப தனித்தனி வாகங்கள் வாங்கி
ஓட்டுவீர்களா?

உங்கள் வாகனத்தை நீங்கள் ஓட்டலாம். நண்பருக்கு இரவல் தரலாம். உறவினர்,
குடும்பத்தினருக்கு இனாமாகத் தரலாம். யாருக்கேனும் பாதி விலைக்கு
விற்கலாம். முற்றிலும் பழுதடைந்து விட்டால், தனித்தனி பாகங்களாகப்
பிரித்து, பழைய பொருட்கள் விற்பனைக் கடையில் விற்கலாம்.

ஆனால், நீங்கள் வாங்கிய மென்பொருளை அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா,
தங்கை, உறவினர், நண்பர் என யாருக்கும் தரக்கூடாது. தந்தால் அது திருட்டு
(Piracy) நீங்கள் திருடர். சட்ட ரீதியாக தண்டனைக்குரிய குற்றம் இது.

இந்தக் கட்டுப்பாடுகள் ஏன்? நமக்கு உடமையான ஒரு பொருளை நாம் யாருக்கும்
தரலாம்தானே. பகிர்ந்து வாழ்வது தானே மனித சமுதாயம்! சிறு வயதில்
சாக்லேட், பேனா, பென்சில் என பகிர்ந்திருப்போமே. கல்லூரி நண்பர்கள்
ஆடைகளைக்கூட பகிர்வதைக் காணலாம்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

- குறள் 322

என்கிறார் வள்ளுவர். அடிப்படைத்தேவையான உணவைக் கூட, பகிர்ந்து உண்ணவே சொல்கிறார்.

மென்பொருளை மட்டும் பகிரவே கூடாதாம்.


உங்கள் வாகனத்தில் சிறு பழுது. என்ன செய்வீர்கள்? அருகில் உள்ள பழுது
நீக்கும் நிலையம் சென்று சரி செய்து கொள்வீர்கள். இயந்திரவியல்
தெரிந்தால் நீங்களே கூட சரி செய்து கொள்ளலாம். வாகனம் பற்றி விரிவாக
அறிய, நீங்களே வாகனத்தை பிரித்து மாட்டி, கற்றுக் கொள்ளலாம்.

மென்பொருளில் ஒரு பழுது என்றால்? அதை உருவாக்கிய நிறுவனத்திடம் தான்
புகார் அளிக்க முடியும். அவர்கள் அதை சரிசெய்ய சில ஆண்டுகள் ஆகலாம்.
பெரும்பாலும் சரி செய்வதே இல்லை. ஆனால் வேறு புதிய பதிப்பை வாங்கச்
சொல்லி வற்புறுத்துவர்.

உங்கள் வாகனம் பஞ்சர் ஆனால் சரி செய்ய முயல்வீர்களா? புது வாகனம் வாங்க
யோசிப்பீர்களா?

நீங்கள் மென்பொருள் துறையில் வேலை செய்து, அதன் நுட்பங்களை
அறிந்திருந்தாலுமே, நீங்கள் வாங்கும் மென்பொருளை உங்களால் பழுதுபார்க்க
முடியாது. ஒரு மெக்கானிக்கிடம் போய், அவரால் பஞ்சர் கூட ஒட்ட முடியாத,
ஒரு வாகனத்தை, அவரிடம் யாரால் விற்க முடியும்? ஆனால் மென்பொருள்
நிறுவனங்கள் இதைத்தான் செய்கின்றன.

இவ்வளவு கட்டுப்பாடுகள் கொண்ட மென்பொருட்களின் விலைகளைப் பார்ப்போமா?

சில பிரபர மென்பொருட்களின் விலைப்பட்டியல்.


விண்டோஸ் இயக்குதளம் 10,000
visual studio – 1,50,000
MS OFfice – 10,000
Photoshop 50,000
Oracle server – 1,50,000
Oracle client – 6000


இவ்வாறு சுமார் 50,000 ரூபாய் விலை உள்ள கணிணியில் நிறுவும்
மென்பொருட்களின் விலை மட்டுமே சில லட்சங்கள். இது ஒரு கணிணிக்கான விலை
மட்டுமே. 100 கணிணிகள் இருந்தால் 100 மடங்கு விலை. மொத்தமாக வாங்கினால்,
சிறிது குறையலாம்.

இந்தியா முழுதும் எத்தனை கணிணி நிறுவனங்கள்? எத்தனை கணிணிகள்?
மென்பொருளுக்காக மட்டும் இந்தியா செய்திருக்கும் செலவில், புது நாட்டையே
உருவாக்கியிருக்கலாம்.
 
அட. நான் இதுவரை எந்த மென்பொருளையும் வாங்கியதில்லையே. திருடித்தானே
வருகிறேன். என்ன பிரச்சனை என்கிறீர்களா? பெரு நிறுவனங்கள் தனி நபர்கள்
செய்யும் திருட்டைக் கண்டுகொள்வதில்லை. அப்போதுதான் எங்காவது வேலைக்குப்
போனால், அதே மென்பொருளையே கேட்பீர்கள். நிறுவனங்கள் திருட்டு செய்ய
இயலாது. உங்களுக்காக அவை பணம் கொட்டி, அந்த மென்பொருளை வாங்கித்
தருகின்றன.

இவ்வாறு இந்தியர்களின் பணம், ஆண்டுதோறும் பல்வேறு நிறுவனங்களுக்கு கப்பம்
கட்டியே செலவாகின்றது. பல்லாயிரக்கணக்கில் கொட்டி வாங்கும்
மென்பொருளுக்கு நம்மிடம் எந்த உரிமையும் இருப்பதில்லை.

இது அடிமைத்தனம் தானே.

இது போல எந்த உரிமையும் தராமல், நம்மை அடிமைப்படுத்தும் மென்பொருட்களை
‘தனியுரிம மென்பொருட்கள்’ Properitory Software என்கிறோம். இவை மனித
சமுதாய வளர்ச்சிக்குத் தீங்கானவை. அறிவுப் பரவலை தடுப்பவை. சக்கரம்
கண்டுபிடித்தவன் இன்றுவரை உருவான ஒவ்வொரு சக்கரத்திற்கும் உரிமை
கொண்டாடியிருந்தால், உலகின் பெரு நிறுவனமாகி இருக்கலாம். ஆனால் மனித
சமுதாயம் வளர்ந்திருக்காது.


பெருநிறுவனங்களிடம் அடிமைப்பட்டிருக்கும் மனித சமுதாயத்திற்கு விடுதலை
தர, மக்களால், மக்களுக்காக உருவாக்கப் பட்டவையே ‘கட்டற்ற மென்பொருட்கள்’
Free Software. இங்கு Free என்பது இலவசம் அல்ல. Freedom.

இந்தக் கட்டற்ற மென்பொருட்கள் தனி நிறுவனங்களின் சொத்து அல்ல. உலக மக்கள்
யாவருக்கும் உரியவை. மனித சமுதாயத்தின் மேல் கொண்ட எல்லையற்ற அன்பினால்,
பல்லாயிரம் கணிணி வல்லுனர்கள் உலகெங்கும் இருந்து ஒன்றாக இணைந்து
கணிணிக்குத் தேவையான எல்லா மென்பொருட்களையும் உருவாக்கி, கட்டுப்பாடுகள்
ஏதும் இல்லாமல் கட்டற்ற மென்பொருட்களாக வெளியிட்டு வருகின்றனர்.

இவை 4 உரிமைகளுடன் வருகின்றன.

1.எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தும் உரிமை

ஒரே பதிப்புதான். Academic, Home, Professional edition எதுவும் இல்லை.
எங்கும் பயன்படுத்தலாம்.

2. யாவருடனும் பகிரும் உரிமை

உங்களிடம் உள்ள ஒரு கட்டற்ற மென்பொருளை யாவருடனும் பகிரலாம். பல்லாயிரம்
பிரதிகள் எடுக்கலாம். நேரில் தரலாம். மின்னஞ்சலில் அனுப்பலாம். உங்கள்
இணையதளத்தில், Torrent ல் என எங்கும் பகிரலாம்.

3. நீங்களே பழுது நீக்கலாம். மேம்படுத்தலாம்

மென்பொருளில் உள்ள பழுதுகளை நீக்க, அதன் மூலநிரல் (Source Code)
வேண்டும்.கட்டற்ற மென்பொருட்கள் மூல நிரலுடனே பகிரப் படுகின்றன. யாவரும்
மூல நிரலைப் பெற்று, படித்துப் புரிந்து கொள்ளலாம். பழுது நீக்கலாம்.
புதிய கூறுகளைச் சேர்த்து மேம்படுத்தலாம். உங்களுக்குத் தேவையான படி,
நீங்களே மாற்றிக் கொள்ளலாம். உங்களுக்கு நிரலாக்கம் (Programming)
தெரியவில்லையா? கவலை வேண்டாம். நம் நாட்டில் நிரலாளர்கள்தான் எங்கும்
உள்ளனரே. கணிணி மாணவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களை வைத்து
மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.

4. மாற்றங்களை புதிய பதிப்பாக வெளியிடலாம்

நீங்கள் திருத்திய, பழுது நீக்கிய, மேம்படுத்திய ஒரு மென்பொருளை, புதிய
பதிப்பாகக்கூட வெளியிடலாம். புதிய பெயரில் கூட.

இவ்வாறு நீங்கள் வெளியிடும், பகிரும் மென்பொருட்களை இதே உரிமைகளோடு, மூல
நிரலுடன் வெளியிட வேண்டும். இலவசமாகத் தரலாம். பணத்திற்கும் விற்பனை
செய்யலாம்.

இந்தக் கட்டற்ற உரிமைகள் ‘பொது மக்கள் உரிமை’ (General Public License -
GPL) எனப்படுகின்றன.

நீங்கள் தனியுரிம மென்பொருட்கள் நிறுவும் போது, EULA(End User License
Agreement) க்கு  I Agree என்பீர்கள். அது உங்களை அடிமைப்படுத்தும் ஒரு
அடிமைப்பத்திரம். கட்டற்ற மென்பொருட்களை நிறுவும் போது, GPL க்கு I Agree
என்பீர்கள். அது உங்கள் விடுதலைப்பத்திரம்.


தனியுரிம மென்பொருட்களால் அடிமைப்பட்டிருக்கும் மக்களுக்கு, கட்டற்ற
மென்பொருட்களால் விடுதலை தரும் இந்த விடுதலைப் போராட்டம், 1983 ல்
தொடங்கியது. இதை GNU (GNU Not Unix) என்ற மென்பொருள் தொகுப்புகளோடு
தொடங்கியவர் ரிச்சர்ட் ஸ்டால்மன். Richard M Stallman (RMS). அவர்
தொடங்கிய இந்த இயக்கம், இன்று கற்பனைக்கும் எட்டாத அளவில் வளர்ந்து, பல
கோடி கட்டற்ற மென்பொருட்களைத் தந்துள்ளது.

download (15)
Richard M Stallman

 

இயக்குதளம் – GNU/Linux
ஆபிஸ் – LibreOffice
நிரலாக்கம் – PHP/Python/Ruby/C/C++
வரைகலை – GIMP, Inkscape
3D – Blender
வீடியோ எடிட்டிங் – OpenShot, Kdenlive, ffmpeg
ஆடியோ எடிட்டிங -Audacity

இது போல, உங்கள் தேவைகள் அனைத்திற்கும் கட்டற்ற மென்பொருட்கள் கிடைக்கின்றன.

உபுண்டு(Ubuntu), லினக்ஸ் மின்ட் (Linux Mint) போன்ற குனு/லினக்ஸ்
பதிப்புகள், நல்ல அழகான,எளிய இடைமுகப்புடன் தனிநபர்களாலும் பெரு
நிறுவனங்களாலும் பயன்படுத்தப் படுகின்றன.


இது மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் ஒரு விடுதலைப் போராட்டம்.
இன்னும் பல்லாயிரம் பேர் தனியுரிம மென்பொருட்களால் அடிமைப் படுத்தப்
பட்டுள்ளனர். அவர்களுக்கு கட்டற்ற மென்பொருட்களை அறிமுகம் செய்ய,
உலகெங்கும் செப்டம்பர் 17 அன்று ‘மென்பொருள் விடுதலை விழா’ (Software
Freedom Day) கொண்டாடப் படுகிறது.
 
download
 
பல்வேறு தன்னார்வக்குழுக்கள் பொது இடங்கள், பள்ளி, கல்லூரி,
நிறுவனங்களில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரை, உரையாடல், கண்காட்சி,
விளக்கவுரைகள், நடத்தி வருகின்றனர்.

‘என் தங்கம், என் உரிமை’ போன்ற விளம்பரப் போராட்டம் அல்ல இது. ‘நம்
மென்பொருள், நமது உரிமை’ என்ற உரிமைப் போராட்டம்.

உங்கள் ஊரிலும் கட்டற்ற மென்பொருள் பற்றிய அறிமுக உரைகள், பயிலரங்குகள்,
பயிற்சிகள் நடத்த அருகில் உள்ள GNU/Linux Users Group ஐ அணுகுங்கள்.
அல்லது எனக்கு எழுதுங்கள்.

எல்லாம் சரி. எல்லா மென்பொருட்களையும் இலவசமாகவே, மூல நிரலுடன் தந்து
விட்டால், எப்படி காசு பார்ப்பது?

கட்டற்ற மென்பொருட்களை இலவசமாகவே தர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நல்ல
விலைக்கும் விற்கலாம். Redhat, CollabNet போன்ற பல நிறுவனங்கள் கட்டற்ற
மென்பொருட்களை  கூடுதல் வசதிளோடு விற்கின்றன.

அது சரி. மூல நிரல் தந்துவிட்டால், எல்லாரும் திருடி விற்பார்களே. பின்
எப்படி வியாபாரம் செய்வது?

உங்களுக்கு சமைக்கத் தெரியுமா? உங்கள் வீட்டில் யாருக்காவது சமையல்
தெரியும் தானே. இணையத்தில் பல்லாயிம் தளங்கள் தினமும் புது சமையல்
குறிப்புகளைத் தருகின்றன. சமையல் நூல்கள்எங்கும் விற்கப் படுகின்றன.
ஆனாலும் தெருவெங்கும் உணவகங்கள். சாலையோரக்கடை முதல் 5 நட்சத்திர உணவகம்
வரை எல்லோருக்கும் தெரிந்த சமையல் குறிப்புகளைக் கொண்டே, பெருமளவில் பணம்
சம்பாதித்துக் கொண்டுதானே இருக்கின்றனர்.

ஐஐயோ. சமையல் குறிப்புகள் எல்லாருக்கும் தெரிந்து விட்டன. இனி பிழைக்க
முடியாது என ஒரு உணவகமாவது மூடப்பட்டுள்ளதா? ஒரு உணவக உரிமையாளருக்கு
உள்ள தைரியம் ஏன் மென்பொருள் நிறுவன உரிமையாளர்களுக்கு இருக்கக்கூடாது?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


••••••••

மலைகள் இதழ் 82 ல் எழுதிய கட்டுரை.
http://malaigal.com/?p=7316


Post a Comment