Thursday, January 28, 2021

Shuttleworth Flash Grant நல்கை


வணக்கம்,

சமீபத்தில் “Shuttleworth Flash Grant” என்ற நல்கைத் திட்டத்தில் 5000 அமெரிக்க டாலர்கள் நல்கைத் தொகை பெற்றேன் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.

நாம் பார்த்தே இராத பலரும் நமது பணிகளைக் கண்டு, அவற்றை ஊக்க்கப்படுத்தும் வகையில், பரப்புரை செய்வதும், பங்களிப்பதும், நன்கொடை அளிப்பதும், நல்கைகள் அளிப்பதும் பெருமகிழ்ச்சி தருபவை. கணியம் அறக்கட்டளையின் பணிகள் அவ்வாறே பலரையும் சென்றடைந்து, பல்வேறு பங்களிப்பும்கள், நன்கொடைகளை பெற்று வருகின்றன.

Shuttleworth Foundation ஆனது சனவரி 2001 ல் தென்னாப்பிரிக்க தொழில் முனைவர் ‘மார்க் ஷட்டில்வொர்த்‘ என்பவரால் தொடங்கப்பட்டது. மனித சமுதாய வளர்ச்சிக்கு உழைப்பவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சமூக ஆய்வுகளை செய்து வருகிறது. இவரே உபுண்டு லினக்சு மற்றும் அதற்கு பங்களிக்கும் ‘கெனானிகல்‘ நிறுவனம் இரண்டையும் தொடங்கி நடத்தி வருபவர்.

சமூகத்திலும் மக்கள் வாழ்விலும் மாற்றங்களை உருவாக்குபவர்கள், தம் பணிகளை செவ்வனே செய்ய, ஷட்டில்வொர்த் அறக்கட்டளை பல்வேறு நல்கைகளைத் தருகிறது. மேலும் விவரங்களுக்கு அவர்களது வலைத்தளம் காண்க. shuttleworthfoundation.org

“Shuttleworth Flash Grant” என்பது அவர்கள் வழங்கும் ஒரு நல்கை. இதன் மூலம் 5000 அமெரிக்க டாலர்கள் தருகின்றனர். 3.60 இலட்சம் இந்திய ரூபாய்கள். ஏற்கெனவே நல்கை பெற்ற ஒருவர் செய்யும் பரிந்துரை மீது ஆய்வு செய்து, பின் இந்த நல்கை வழங்குகின்றனர். இத்தொகையை நாம் விரும்பும் எந்த நற்செயலுக்கும் பயன்படுத்தலாம். என்ன செய்தோம் என்று அறிக்கை எழுத வேண்டும். இதுவரை இந்த நல்கை பெற்றோர் விவரங்கள் இங்கே – shuttleworthfoundation.org/fellows/flash-grants/

Coko Foundation – கோகோ அறக்கட்டளையின் நிறுவனர் ஆதம் ஹைட் (Adam Hyde) அவர்கள் எனக்கு இந்த நல்கையை பரிந்துரை செய்தார். கோகோ அறக்கட்டளை குழுவினர் பதிப்பக உலகிற்குத் கட்டற்ற மென்பொருட்களை உருவாக்கி வருகின்றனர். நல்கைக்கு பல்லாயிரம் நன்றிகள் ஆதம்.

https://i0.wp.com/coko.foundation/wp-content/uploads/2019/08/color.svg_.png?resize=363%2C139&ssl=1
https://i0.wp.com/coko.foundation/wp-content/uploads/2017/11/0E7A0538.md_bwsq.jpg?resize=232%2C232&ssl=1

ஆதம் ஹைட் (Adam Hyde)

நல்கைத் தொகை முழுதும் கணியம் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க உள்ளேன். வரி விலக்கு தரும் 80 ஜி அனுமதிக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்த பின் கணியம் கணக்கிற்கு அனுப்புவேன். FreeTamilEbooks.com , தமிழ் விக்கி மூலம் ஆகிய திட்டங்களுக்கு இத்தொகையை பயன்படுத்துவோம். இவை சார்ந்த நிகழ்ச்சிகள், நிரல் திருவிழாக்கள், பயிற்சிப் பட்டறைகள் நடத்த உள்ளோம். செலவு அறிக்கையை 6-12 மாதங்களில் பகிர்வோம்.

ஷட்டில்வொர்த் அறக்கட்டளையின் ஜேசன், அச்சல், கோகோ அறக்கட்டளை நண்பர்கள், ஆதம், கணியம் அறக்கட்டளை பங்களிப்பாளர்கள், கட்டற்ற மென்பொருட்கள் பங்க்களிப்பாளர்கள் ஆகியோருக்கு எனது நன்றிகள். இணைந்து சிறந்த உலகை உருவாக்குவோம்.

த. சீனிவாசன்

Saturday, January 16, 2021

பொங்கல் வாழ்த்து அட்டைகள் 2021

 இந்த ஆண்டும் பொங்கல் விழாவிற்கு வாழ்த்து அட்டைகளை வரைந்து அனைவருக்கும் அனுப்ப முடிவு செய்தோம்.

இம்முறை அஞ்சல் அட்டைகள் 25 பைசாவிற்கே கிடைத்தது. நம்ப முடியவில்லை அல்லவா? சாதாரண அட்டை 50 பைசா. பாதி பக்கம் விளம்பரத்துடன் உள்ள அட்டை 25 பைசா. 

30 ரூபாய்க்கு 120 அட்டைகள் வாங்கினேன். குழந்தைகள் ஒரு பக்கம் மட்டும் வரைந்தால் போதும்.


வீட்டில் சிறார்கள் எண்ணிக்கை அதிகம். அவர்கள் வரைந்து தள்ளி, வீணாக்கியது போக, அவர்களுக்குள்ளேயே பரிமாறியது போக, அவர்களே தபால்காரராக மாறி, வீடுகளுக்கு தந்தது போக, நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்ப ஓரளவு தேறின.


ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 வாழ்த்து அட்டைகள் உருவாக்கி அனுப்புவோம். அவர்கள் எளிதில் வரைத்து விடுகின்றனர். 50 முகவரிகள் எழுதுவதற்குத்தான் எனக்கு நாக்கு தள்ளிவிடும். பள்ளிக்காலங்களில் பல நூறு பக்கங்கள் எளிதில் எழுதித்தள்ளிய எனக்கு, சில முகவரிகள் எழுதவே கை வலிப்பது காலக்கொடுமை. இம்முறை அனைவரது முகவரியையும் glabels என்ற கட்டற்ற மென்பொருள் மூலம் தாளில் அச்சிட்டு, வெட்டி, அட்டைகளில் எளிதில் ஒட்டினேன்.

glabels.org  இந்த முகவரியில் இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்யலாம். முகவரிகளை ஒரு Spreadsheet ல் எழுதி Tab Separated Value (TSV) கோப்பாக சேமிக்க வேண்டும். பின் அதை glabels ல் இறக்கி, லேபிள் வடிவமைத்து, பின் PDF ஆக மாற்றினேன். அருகில் உள்ள இணையக்கடையில் அச்சிட, அங்கேயே அளவாக வெட்டியும் தந்தார்கள்.

ஓரளவு நன்றாக உள்ள வாழ்த்து அட்டைகளை வியன், இயல், எரிக், கலை தேர்ந்தெடுத்தனர். அவற்றில் முகவரிகளை ஒட்டினர். பின் அவற்றை தபால் பெட்டியில் போடும் வைபவம். நான், நித்யா, வியன், இயல், பாரி, தோஷிதா, சாய் கிருபா ஆகியோர் ஊர்வலமாக அஞ்சலகம் போனோம். ஒவ்வொருவராக அஞ்சல் அட்டைகளை தபால் பெட்டியில் போட, ஒருவர் பெட்டியின் பூட்டை ஆட்டி, திறக்க முயன்றார். சத்தம் கேட்டு அஞ்சல் அலுவலர் வந்து, எங்களைக் கண்டு சிரித்து விட்டுப் போனார்.



பின் அருகில் உள்ள சிறு பண்ணை வீட்டில் வளர்ந்து வரும் சேவல், கோழிகளை வேடிக்கை பார்த்தோம். வியன் அருகில் உள்ள மரம் மீது ஏறக்கற்றான். 


 


 

பின், வீடுகளில் இருந்து எட்டிப் பார்த்தோர், வண்டியில் பழம் விற்கும் அக்கா ஆகியோரிடம் வம்பளந்தபடியே வீடு வந்து சேர்ந்தோம்.
நான்காவது ஆண்டாக வாழ்த்து அட்டைகள் அனுப்பும் நிகழ்வைத் தொடர முடிவதில் பெருமகிழ்ச்சி. ஒரு 25 பைசா அட்டை இந்தியா முழுதும் சென்றடைய முடிவது, மாபெரும் சாதனையே.


அஞ்சலம், வங்கி போலாகி, பல்வேறு பணிகள் செய்து, தன் இருப்பை நிலைநாட்ட பெருமுயற்சி எடுத்து வருகிறது. அதனூடே, வாழ்த்து அட்டைகள் பரிமாறும் பழக்கத்தை மேம்படுத்த, அஞ்சல் துறை ஒரு முயற்சி எடுக்கலாம். குறைந்த விலையில் ஓவியங்கள், குழந்தைகள் விரும்பும் கார்ட்டூன்கள் விற்கலாம். அஞ்சல் அட்டைகளில் ஓவியம் வரையும் போட்டிகள் நடத்தலாம்.

எல்லா மாற்றங்களும், நம் வீடுகளில் இருந்தே தொடங்க வேண்டும். நீங்களும் யாருக்கேனும் வாழ்த்து அட்டை அனுப்புங்கள். முடிந்தால் ஒரு கடிதம் எழுதிப் பாருங்கள். கிறுக்குத் தனமாகத் தோன்றினாலும், எல்லா நேரத்திலும் அதி புத்திசாலியாக இருந்து என்ன ஆகிவிடப்போகிறது? செய்யும் ஓராயிரம் வெட்டி வேலைகளில் கடிதம் எழுதுவதும் இருந்து விட்டுப் போகட்டுமே.

சமீபத்தில் நண்பர் அன்பரசு எனக்கு எழுதும் அஞ்சல் அட்டைக் கடிதங்கள் பெருமகிழ்ச்சி தருகின்றன. எழுத்தைப்போல் அன்பை உணர்த்துவது வேறு எதுவும் இல்லை என்பதை கடிதங்கள் உணர்த்துகின்றன.

பட மூலம் - http://theinspirationroom.com/daily/2007/australia-post-touch/

வியன் எழுதக் கற்றுக் கொண்டான். கடிதம் எழுதும் வழக்கம் ஏற்படுத்தித் தர வேண்டும்.

கடந்த வருட வாழ்த்து அட்டைப்பதிவுகளை இங்கே படிக்கலாம்.

https://tshrinivasan.blogspot.com/2020/01/pongal-greeting-cards-2020.html

https://tshrinivasan.blogspot.com/2017/10/greeting-cards-and-celebrations.html


அடுத்த ஆண்டு உங்களுக்கும் வாழ்த்து அட்டை வேண்டுமெனில் உங்கள் முகவரியை எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். (tshrinivasan@gmail.com) நீங்களும் யாருக்கேனும் வாழ்த்து அட்டை அனுப்புங்கள்.