Saturday, October 21, 2017

அகத்தி - நம்ம சந்தை - 4 - நிகழ்வுக் குறிப்புகள்


சென்னை, கிழக்கு தாம்பரம் அகத்தி தோட்டத்தில் நம்ம சந்தையின் நான்காவது நிகழ்வு, அக்டோபர் 15, 2017 அன்று நடந்தது.






'பூவுலகின் நண்பர்கள்' குழுவின் திரு.சுந்தர்ராஜன் அவர்கள் முதலில் பேசினார். புவிக்கு மனிதர்கள் உண்டாக்கும் கேடுகள் பற்றி நிறைய உதாரணங்களோடு பேசினார். உதகை, கொடைக்கானலின் தேயிலைத் தோட்டங்கள், பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள், ஏரிகளின் மீதான கட்டடங்கள், சென்னை வெள்ளத்தின் காரணங்கள், நதி நீரோட்டம், நதிகள் கடலில் கலப்பதின் தேவைகள், அணைகளால் ஏற்படும் சிக்கல்கள், நதிகளை இணைப்பதில் உள்ள அபாயங்கள் பற்றி எடுத்துரைத்தார்.





பிறகு, திருமதி. நித்யா, கரகாட்டம் பற்றி பேசினார். தமிழரின் கலைகளுள் ஒன்றான கரகாட்டம், பரதம் போன்றே பழம்பெருமையும் புனிதமும் கொண்ட ஒன்று என்றும், எளியோர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் ஆதரவு தந்து சபாக்கள், நடன இயக்கங்கள் போன்ற இடங்களில் அரங்கேற்றம் செய்ய உதவி புரிய வேண்டினார். பிறகு அவரது கரகாட்ட நடனம் தொடங்கியது.


அவரைத் தொடர்ந்து, அவருடனே கரகாட்டம் கற்கும் 65 வயது இளைஞர் திரு. தணிகாசலம் அவர்களின் கரகாட்டம், பார்வையாளர்களை பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. எதையும் கற்றுக் கொள்ள, வயது ஒரு பொருட்டல்ல என்பதை உணர முடிந்தது.




பார்வையாளர்கள் பலரும் கரகத்தை தம் தலையில் வைத்து ஆட முயன்று மகிழ்ந்தனர்.




பிறகு, 'உடலே மருத்துவர்' என்ற தலைப்பில் வானகத்தில் இருந்து வந்த தோழர். சிவகாமி அவர்கள் பேசினார். சரியான உணவு, சரியான தூக்கம், நல்ல உழைப்பு இவையே ஆரோக்கியத்திற்கு அடிப்படை. கடைகளில் தயாராகும் திடீர் உணவுகளை விட, வீட்டு உணவே உடலுக்கு நல்லது. சாதாரண சளி, இருமல், காய்ச்சல் ஆகியவற்றுக்கு உடனே மருத்துமனை நாடாமல், ஓரிரு நாட்கள் பொறுத்தால், அவை தானாகவே சரியாகி விடும் என்றார்.  [ பெருவியாதிகள், தொற்றுநோய்களுக்கு மருத்துவரின் ஆலோசனை அவசியம்].



பிறகு பேசிய பானுசித்ரா, தீபா இருவரும் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில்  ஏற்படும் உடல், மனச் சிக்கல்கள்களை விளக்கினர். ஆண்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வதில் அவசியம், குடும்பத்தினர் தர வேண்டிய ஆதரவு, துணியாலான நாப்கின்களின் பயன்கள் பற்றிப் பேசினர் .



சிறுதானிய மதிய உணவுக்குப் பின், பனைப் பொருளாதாரம், பனைப் பொருட்கள், பனையின் அழிவு, காக்க வேண்டிய தேவை பற்றி 'சுதேசி இயக்கத்தின்' நம்பி ஐயா அவர்கள் பேசினார்.



தோழர் காக்ஸ்டன் அவர்கள், தமிழ்நாடு முழுதுமான தனது பயணங்கள், தற்சார்பு, விவசாயப் பொருளாதாரம் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்தார்.


மாணவர் சரவணன்  அவர்கள், குறைந்து வரும் தமது பார்வை பற்றியும், பார்வையற்றோருக்கான முன்னேற்ற வாய்ப்புகள் பற்றியும் பேசினார்.


திரு. தணிகாசலம், திருமதி. சாந்தி மேரி மற்றும் சிலர், நிகழ்வு பற்றிய கருத்துகளையும், நன்றியும் கூற, இனிதே நிகழ்வு நிறைவடைந்தது.



சந்தையில் பல்வேறு கடைகள் இருந்தன. இயற்கை விவசாயப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்கின்றனர். மரச்செக்கு எண்ணெய், பனங்கருப்பட்டி, அவல், சிறுதானிய சத்துமாவு, துணி நாப்கின், பனைத் தின்பண்டங்கள், சிறு தானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், மண்பாண்டங்கள், கைவினைப் பொருட்கள், புத்தகங்கள், கீரைகள் என பல்வேறு பொருட்கள் விற்கப்பட்டன. ஆர்வமுடன் வாங்கி ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றிகள்.




இன்னொரு பகுதியில், சிறார்களுக்காக விளையாட்டுகளுடன், வீட்டுத் தோட்டம் அமைக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. வழக்கறிஞர் சக்திவேல் இலவச சட்ட ஆலோசனைகளை வழங்கினார். மேலும் அக்குபஞ்சர், சித்த மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

விற்பனை மட்டுமே நடக்கும் சந்தையாக மட்டுமின்றி, பல்வேறு நிகழ்வுகளுடன், பல சிந்தனைகளைத் தூண்டும் நிகழ்வாக அமைந்திருந்தது. ஏற்பாடு செய்த நண்பர்களுக்கும், கருத்தாளர்களுக்கும், வருகை புரிந்தோருக்கும் நன்றிகள்.




ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிறு அன்று நடக்கும் இந்நிகழ்விற்கு, ஏற்பாடு செய்தல், இடம் தயாரித்தல்,சுத்தம் செய்தல், உணவு தயாரித்தல், பரப்புரை செய்தல் என பல்வேறு பணிகள் உள்ளன. இவற்றுல் ஏதேனும் ஒன்றை தன்னார்வப் பணியாக செய்ய உங்களையும் அழைக்கிறோம். நீங்களும் ஏதேனும் ஒரு வகையில் உதவ இயலுமெனில் எங்களை அழையுங்கள். மணி -  9840890168 , இளவரசு - 9940258184, தீபா - 9042023090

குறிப்பு -
1. அடுத்த சந்தையில் நலிவடைந்த இயற்கை வேளாண் விவசாயிகளை தத்தெடுக்கும் திட்டம் அறிவிக்கப் பட உள்ளது. முதல் கட்டமாக விழுப்புரம் விவசாயி திரு. பாண்டியன் அவர்களுக்கு உதவ அழைக்கிறோம்.


2. நஞ்சில்லா வீட்டு உபயோகப் பொருட்கள், துணியாலான அணையாடைகள் செய்யும் பயிற்சித் திட்டங்களும் அறிவிக்கப் பட உள்ளன.



கரகாட்டம் முதலிய தமிழர் கலைகள் கற்க -சுக்ரா டான்ஸ், மாடம்பாக்கம், சென்னை - +(91)-9600366010, 9500555737

அகத்தி தோட்டத்தில் உரையாடலாம் வாருங்கள்.


மேலும் சில படங்கள் இங்கே - https://photos.app.goo.gl/c8xCyvBfOlFGRcED3



Friday, October 20, 2017

வாழ்த்து அட்டைகளும் திருவிழாக்களும்


எனது சிறுவயதில், எல்லாத் திருவிழாக்களும் ஒரு மாதம் முன்பே தொடங்கிவிடும். எல்லாக் கடைகளிலும் வாழ்த்து அட்டைகள் தொங்கப்படும். தினமும் பள்ளி விட்டு வீடு வரும்போது, ஒவ்வொரு கடையாக மேய்வோம். எனது நண்பர்கள் பல்வேறு குழுக்களாக இருந்தோம். ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, சரத்குமார், சத்யராஜ், பிரசாந்த், குஷ்பு, கௌதமி, பானுப்பிரியா, சுகன்யா என பாரபட்சமின்றி அனைவருக்காகவும் தனிக்குழு வைத்திருத்தோம். இதில் எதிரிக் குழுக்களும் உண்டு. பத்திரிக்கை விளம்பரங்களில் வரும் படங்களைக் கத்தரித்து ரகசிய ஆல்பங்கள் செய்தோம். வாழ்த்து அட்டைகள் தரமான படங்களைத் தந்ததால், அவையே எமக்கு மிகவும் பிடித்தமானவை.

அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என அனைவரிடமும் சிறு வேலைகளுக்கும் காசு வாங்குவோம். கடைகளில் தரும் மிச்சத்தை அப்படியே அபேஸ் செய்வோம். எல்லாம் வாழ்த்து அட்டை வாங்கத்தான். பிடித்த நடிகைகள் படம் போட்ட அட்டைகள் அதிகம் கிடைக்காத வருத்தம் வேறு. ஸ்டாம்பு வாங்க, காசு கிடைக்காத காலங்களில், அஞ்சல் அட்டைகளே ஒரே வழி. அதில் கையால் வரைந்து, வாழ்த்துகள் எழுதி அனுப்பி விடுவோம்.

அட்டைகளை மாறி மாறி அனுப்பி மகிழ்வோம். தபால் காரர் தேவதூதனாய்த் தெரிவார். பேனா நட்பு வட்டமும் சேர்ந்து கொள்ள, வீட்டுப்பாடங்களை விட, கடிதம் எழுதும் வேலையில் தினமும் அதிக நேரம் கழியும். அனைவரின் முகவரியும் மனப்பாடமாய்த் தெரியும். நண்பர்களிடமிருந்து வாழ்த்து அட்டைகளும் பக்கம் பக்கமாய் கடிதங்களும் பெறும் மகிழ்ச்சி வேறு எதையும் விட அதிகமானது.

கல்லூரிக் காலத்தில் கணினி அறிமுகமானாலும், ஓரிரு ஆண்டுகள் கடிதங்கள் வழியே வெளியூர் நண்பர்களுக்கு அஞ்சலட்டையில் நுணுக்கி, நுணுக்கி எழுதி மகிழ்ந்தோம். தொலைபேசியின் வருகை  கடிதங்களின் எண்ணிக்கையைக் குறைத்தது. இணையம் வந்தது, யாஹூ சாட் வந்தது. கடிதங்கள் வருவது நின்றே போனது. எல்லாத் திருவிழாக்களுக்கும் மின்னஞ்சல் மூலமே வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டோம்.

ஸ்மார்ட்போன் வந்து, மின்னஞ்சல் எழுதுவது நின்றது. பேசுவது கூட நின்றே போனது. வாட்சப் செய்தி மட்டுமே தொடர்பு கொள்ளும் வழி என்றானது. நமது எண் மட்டுமே தெரியும் காலமாகிப் போனது.

என் மகன் வியன். மூன்றரை வயது. கூடுமான வரை டிஜிட்டல் ஆதிக்கம் இல்லாமல் வளர்க்க முயல்கிறோம். வீட்டில் தொலைக்காட்சி இல்லை. என்னிடம் ஸ்மார்ட்போனும் இல்லை. நித்யா கண்டிப்புடன் அவனிடம் போன் தருவதில்லை. புத்தகங்கள், கதைகள், ஓவியங்கள், புதுப்புது குட்டி பொம்மைகள், புதுப்புது விளையாட்டுகள் என்றே வாழ்கிறோம். சுவரெங்கும் ஓவியங்கள், நோட்டுப் புத்தகங்கள் எங்கும் கிறுக்கல்கள். சில நேரங்களில் உடைகளில் கூட. என்ன, புதுக்கதைகள் சொல்ல, நம் மூளையை அதிகம் கசக்க வேண்டியிருக்கிறது.
 
இந்த தீபாவளியை வாழ்த்து அட்டைகளோடு கொண்டாட முடிவு செய்தோம். அஞ்சலகம் சென்று அஞ்சலட்டை வாங்கினோம். ஒரு அட்டை 50 பைசாதான். இந்தியா முழுதும் போகும். 30 ரூபாய்க்கு 60 அட்டைகள். ஒரு வாரத்தில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாழ்த்து அட்டைகள் வரைந்து தள்ளி விட்டான்.




      
60 பேரின் முகவரிக்கு எங்கே போவது? அப்போதுதான் உணர்ந்தோம். யாருடைய முகவரியும் எங்களிடம் இல்லை. நண்பர்களுக்கு முகவரி கேட்டு செய்தி அனுப்பினால், 'ஏன்? எதற்கு?' என்று கேள்விகள் மட்டுமே பதிலாய். ஒரு திடீர்ப் பரிசுக்கு நாம் யாருமே தயாரில்லை போல. சிலர் போன் செய்தே கேட்டனர். ஏதாவது சொல்லி, சமாளித்து முகவரி வாங்கினேன். தம்பி சுரேஷ் உறவினர் முகவரிகள் சேகரித்தான். ஒரு வழியாக எல்லோர் முகவரியும் பெற்று அட்டைகளை அனுப்பி வைத்தோம். சுபம்.









நண்பர்கள், உறவினர்களின் குழந்தைகள் பெயருக்கே முகவரி எழுதினோம். அவர்கள் பெறும் முதல் வாழ்த்து அட்டை இதுவாகத்தான் இருக்கும். வாழ்த்து அட்டைகளைப் பெற்றோர், போனில் அழைத்துப் பாராட்டினர்.

இனிய தருணங்களையும், அற்புதமான. நினைவுகளையும் உருவாக்குவதற்குத்தானே திருவிழாக்கள். வாழ்த்து அட்டைகள் எழுதுவோருக்கும், பெறுவோருக்கும் இனிமையைத் தருகின்றன. நீங்களும் அடுத்த திருவிழாவிற்கு வாழ்த்து அட்டைகள் உருவாக்கிப் பாருங்கள். டிஜிட்டல் உலகம் தர இயலாத, பெருமகிழ்ச்சியைப் பிறர்க்குத் தந்து, நீங்களும் அடைவீர்கள்.


பட மூலம் - http://theinspirationroom.com/daily/2007/australia-post-touch/

Tuesday, October 17, 2017

குறைந்த விலையில் இன்று வாங்கிய மின்னூல்கள்


நண்பர் இரா.சுப்ரமணி, அமேசானில் தள்ளுபடியில் மின்னூல்கள் வாங்கியது பற்றி எழுதியிருந்தார்.


நானும் அமேசான் காட்டில் சற்று மேய்ந்து, பின்வரும் மின்னூல்களை வாங்கினேன்.

  1. கார்ல் மார்க்ஸ் - அஜயன் பாலா - 9 ரூ
  2. கொங்குதேர் வாழ்க்கை - நாஞ்சில் நாடன் - 9 ரூ 
  3. இந்தியப் பயணம் - ஜெயமோகன் - 9 ரூ
  4. டர்மரின் 384 - சுதாகர் கஸ்தூரி - 12.50 ரூ 
  5. பல்லவர் வரலாறு - மன்னர் மன்னன் - 29 ரூ

நீங்களும் அமேசான் மின்னூல் காட்டில் தேடி, தள்ளுபடியில் அள்ளுங்கள். விரைவில் தள்ளுபடிகள் முடியலாம்.

Tuesday, August 15, 2017

நம்ம சந்தை / சிறார் களம்-2 - நிகழ்வுக் குறிப்புகள்


கடந்த ஆகத்து 13 ஞாயிறு 2017 அன்று கிழக்கு தாம்பரத்தில் 'நம்ம சந்தை / சிறார் களம்-2' என்ற நிகழ்வை தாம்பரம் மக்கள் குழு நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். காலை 10 மணி முதல் மாலை 4 வரை பல்வேறு நிகழ்வுகள் நடந்தன.





இடம் : அகத்தி தோட்டம், MES ரோடு 1 வது குறுக்கு தெரு, கிழக்கு தாம்பரம், சென்னை ( கார்லி பள்ளி அருகில் ). இவ்விடம் வீட்டுக்கு மிக அருகில் இருப்பதால், நான், நித்யா, வியன் மூவருமே சென்றோம். இடத்தில் பெரிய தோட்டம், மரம், செடிகளோடு உள்ளது.  13 கடைகள் இருந்தன. இயற்கை விவசாயத்தில் விளைந்த தானியங்கள், எலுமிச்சை, செக்கு எண்ணை, சோப்பு, பலகாரங்கள், இனிப்புகள், நாட்டு மாட்டு மோர், கீரை, புத்தகங்கள், மண்பாண்டங்கள் என பல்வேறு கடைகள் இருந்தன. ஒரு இளைஞர் தமிழர் தற்காப்புக் கலைகள் பற்றிப் பேசினார். சிலம்பத்தின் சில முறைகளை செய்து காட்டினார். ஒரு சிறுமி தன் சிறு கைகளால் அனைவருக்கும் டாட்டூ வரைந்து விட்டது பேரழகு.



பின், 'விவசாயமும் சந்தையும்' என்ற தலைப்பில் புதுகோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் தோழர் அகிலா பாரதி உரையாற்றினார்.


சிறுவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. பல்லுயிர் ஓங்குக என்று சொல்லி ஒரு பப்பாளியை பகுத்துண்டோம். பின் அவர்களுக்கான விளையாட்டுகள், கதை சொல்லல் என பல நிகழ்வுகள் தனியே நடந்தன.



பாரதி கண்ணன் ஒரு புத்தகம் பற்றிய அறிமுகம் தந்தார். நைஜீரியா நாட்டில் ஷெல் நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்காக, இனக்குழுக்களிடையே உருவாக்கிய கலகங்கள், போராட்டங்கள், மரணங்கள் பற்றிப் பேசும் நூல் அது. இதே நிலைமை கதிராமங்கலத்தில் தொடர்வது பற்றியும் உரையாடினார்.



வழக்கறிஞர் சிவக்குமார், உள்ளாட்சி, ஊராட்சி பற்றி பேசினார். எல்லாப் பஞ்சாயத்துகளிலும் நடக்கும் கிராம சபைகள் பற்றி பேசினார். அதன் தீர்மானங்கள், சட்டமன்ற, நாடாளுமன்றத் தீர்மானங்கள் போலவே வலுவானவை என்றார். அனைவரையும் தமது அல்லது அருகில் நடக்கும் கிராம சபைகளில் கலந்து கொள்ள வேண்டினார்.


மதிய உணவு சிறு தானியங்களால் செய்யப் பட்டிருந்தது. முறையாகச் செய்தால், சிறு தானிய உணவு, அரிசிச் சோறை விட நன்றாகவே இருப்பதை உணர்ந்தோம்.

பிறகு, கருத்துக்கேட்பு நிகழ்வில் பலரும் தமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் குறைகளையும் தெரிவித்தனர். சுமார் 4 மணியளவில் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.


பெரும்பாலும் விவசாயிகளே நேரடியாக விற்கின்றனர். அவர்களுக்கோ, பொது மக்களுக்கோ கட்டணம் ஏதுமில்லை. சுமார் 150 குடும்பங்கள் வந்திருந்தனர். ஆர்வமுடன் பல்வேறு பொருட்களை வாங்கினர். விவசாயிகளே நேரடி விற்பனை செய்ததால், விலையும் ஆர்கானிக் கடைகளை விட குறைவாகவே இருந்தது.

'தாம்பரம் மக்கள் குழு' வின் தன்னார்வலர்களே அனைத்து செலவுகளையும் ஏற்கின்றனர். பல்வேறு தினசரி வேலைகளினூடே, இப்பணிகளுக்கு நேரம் ஒதுக்கி, உழைப்பை நல்கும் அனைத்து நல்லோர்களுக்கும் பல்லாயிரம் நன்றிகள். வருகைப்பதிவு செய்தல், சமையல், சுத்தம் செய்தல், சிறார்களுக்கு நிகழ்வுகள் நடத்துதல், அவர்களுக்கான கைவினைப்பொருட்கள் தயாரித்தல், பேனர் தயாரித்தல், பரப்புரை செய்தல் எனப் பல்வேறு வேலைகள் உள்ளன. அடுத்த நிகழ்வுக்கு என்னாலான உதவிகள் செய்யப் போகிறேன். நீங்களும் ஏதேனும் ஒரு வகையில் உதவ இயலுமெனில் இவர்களை அழையுங்கள்.
மணி -  9840890168 , இளவரசு - 9940258184, தீபா - 9042023090

இந்நிகழ்வை ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை தொடர்ச்சியாக நடத்துவது என முடிவெடுத்துள்ளனர்.

தாம்பரம் அருகில் உள்ளோர் தவற விடக்கூடாத நிகழ்வு இது.

அகத்தியின் முகநூல் பக்கம் இது - https://www.facebook.com/Agaththi/

நிகழ்வின் சில படங்கள் இங்கே - https://goo.gl/photos/F2AmKwiNzyEcEF2g6

Tuesday, May 30, 2017

முதியவரையும் நடனமாடச் செய்யும் தமிழர் இசை

மே 1, 2017 அன்று ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டுவிழாவின் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டோம்.

நித்யா, தமது குழுவினருடன் கரகம், கொம்பாட்டம் ஆடினார்.

பிறகு குழுவினரின் பறையிசை தொடங்கியது. இதன் துள்ளலிசைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. கேட்டும் எவரையும் ஆட வைத்து விடும்.

திடீரென ஒரு முதியவர் மேடையில் ஏறினார். தன்னை மறந்து ஆடத் தொடங்கிவிட்டார். இரண்டு முறை தமது ஆட்டத்தை நிறுத்த முயன்றாலும், இசையின் தாக்கத்தால் தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்தார்.

கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக அமைந்தது இந்த நடனமும் இசையும்.
அவரது நடனத்தின் காணொளி இதோ.


நமக்கெல்லாம், அவர் வயதில், உற்சாக நடனமாடும் மனமும் உடலும் வாய்க்கப் பெற்றாலே, பெரிய வரம்தான்.

அந்தப் பெரியவருக்கும், மாடம்பாக்கம் சுக்ரா நடனக்குழுவினருக்கும் நன்றி !

புடு புடு வண்டி


என் தம்பி சுரேஷ், கல்லூரி நாட்களில் இருந்து காணும் ஒரு கனவு  -   Royal Enfield வண்டி வாங்குவது.
கனவுகளை நனவாக்கும் விளையாட்டில் மேலும் ஒரு வெற்றி.
மூன்று நாட்களுக்கு முன், விரும்பிய வாகனத்தை வாங்கியதில், பெரு மகிழ்ச்சி.
தனது மகிழ்ச்சியை அவன் வார்த்தைகளால் வெளிப்படுத்தியதை இங்கு பகிர்கிறேன்.

===============================

மூலம் -
https://www.facebook.com/thasuresh/posts/10212571260853121?notif_t=like_tagged&notif_id=1495898573748224

#Royal_Enfield என்று பெயரை கூட அறியா வயதில், புடு புடு வண்டி என்ற செல்ல பெயரில் தான், சிறு வயதில் எனக்கு அறிமுகம் ஆனது. 😄 இந்த வண்டி தான் வாங்க வேண்டும் என்பது அந்த சிறு வயது ஆசை, (2007-2017) 10 வருட கனவு. 2007-இல், பல்லவன் பாலிடெக்னிக் முடித்த உடன் வாங்கலாம்-னு ஆசை பட்டு கொண்டே இருக்க, 2010-ல் கோடம்பாக்கம் #MSEC- ல் Engg., யும் முடிந்து, ஒரு வருட software வாழ்க்கை bore ஆக செல்ல, 12th முடிக்கையில் இருந்த கனவு படிப்பான #BL_Law-வும் 2014-ல் முடித்தாயிற்று.

அடுத்தது என்ன செய்வது என்று யோசிக்கும் போது, சீனு தாம்பரம்-ல் settle ஆய்டான், அருள் டெல்லி-ல இருக்கான், நீ தான் எங்களுடன் இருக்க வேண்டும், எங்களுக்கு அடுத்து குடும்பத்தில் govt officer இல்லையே என்ற அப்பா, அம்மா ஆதங்க பட்ட உடனே வந்தது தான் #TNPSC #GOVT #JOB ஆசை. காஞ்சிபுரம்-ல Job, அதுவும் govt job-னா ஆசை வராம இருக்குமா?! 😍😎😋

2 வருட Tnpsc வாழ்க்கை வேகமாக ஓட, இப்போது #Group4-ல் clear செய்தாயிற்று. 💪👍
 
எனக்கு 2007-2014, எட்டு வருட #கோடம்பாக்கம் room வாழ்க்கை பிடித்து இருந்தாலும், குருபாதம்_இட்லி_கடை, வடிவேல் கடை சாம்பார் இட்லி என சொந்த ஊர்-ல், அப்பா அம்மா, நண்பர்களுடன், govt job-ல வேலை செய்ரவன், வாழும் போதே சொர்கம்-ல இருக்கிறவன். 😊💪

இதற்கிடையில் bullet bike-க்கு எவ்வித சிரத்தையும் எடுக்காமல், என் உருவத்திற்கு சம்பந்தமே இல்லாத scooty pep உடன் பல வருடங்கள் ஓடி விட்டது.

ஆனால், இப்போது #Job_Order வருவதற்க்கு முன்பே, இதோ என் #Royel_Enfield #Redditch_red #Classic_350 😊😊😊

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/18740152_10212571243332683_817382015631658532_n.jpg?oh=666848466d85e843f0ca058b2d0b52f6&oe=59A30C40 


#கனவுகளும்_அதை_நனவாக்குதலும் தொடரும். அதற்க்கு தானே இந்த ஒரே ஒரு வாழ்க்கை. 😇😇😇

த.சுரேஷ்.



Image may contain: 2 people, motorcycle and outdoor
===============================

பல்லாயிரம் வாழ்த்துகள் தம்பி!
கனவுகள் யாவும் நனவாகட்டும்!!