Showing posts with label வாசிப்பு. Show all posts
Showing posts with label வாசிப்பு. Show all posts

Wednesday, November 20, 2019

5 முதலாளிகளின் கதை - மின்னூல் - வாசிப்பு அனுபவம்



https://www.amazon.in/gp/product/B07ZXJQH4T



சிறுவயது முதலே எனக்கு என் வயது தோழர்களை விட சில வயது மூத்தவர்களே அதிகம் நட்பானவர்கள். அவர்கள் சொல்லும் அனுபவக் கதைகளே என்னை அதிகம் செதுக்கியவை. கல்விக் காலங்களில், டியூஷன், பள்ளி, கல்லூரி நேரம் போக அதிகமாய் அங்கு இருந்தது அவர்களுடன் பொது விஷயங்களை பேசுவதற்கே. வேலைக்குப் போன பின்னும் எனக்கு அமைந்த மேனேஜர்கள், டேமேஜர்களாக இல்லாமல் அண்ணன்களாகவே அமைந்தனர். பணியிடங்களை விட, மைதானங்களிலும், மலையேற்றங்களிலும், சுற்றுலாக்களிலும் அவர்களிடம் கற்றவையே மிக அதிகம். பெரும்பாலும் அவர்கள் சொல்பவை சுயபுராணங்களே. நீண்ட, தனிமையான தருணங்களில் மட்டுமே, மனதின் அடிவாரத்திலிருந்து வைரங்களை வெட்டி எடுத்துத் தருவர். தோல்விகள், உறவுகள், வெற்றிகள், இனிய தருணங்கள் என மனித வாழ்வின் பல முகங்களை காட்டி, என்னை பண்படுத்தியுள்ளனர்.  இதே பணியை சிலர் எழுத்து வழியாகவும் செய்கின்றனர். தனது அனுபவங்களையும், கருத்துகளையும்,சறுக்கல்களையும், கற்றல்களையும் ஒளிவு மறைவுமின்றி, தனியான தருணங்களில் மனமொத்தவர்களிடம் பகிர்வது சுலபம். ஆனால் அவற்றை இணையவெளியில் எழுதி பொதுவில் வைப்பது ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு எளிதில் சாத்தியமாகிறது.

கணநேர வாசிப்பு இன்பம் தரும் சமூகவலைத்தள அலையடிக்கும் இக்காலத்திலும், சற்றே நீண்ட வலைப்பதிவுகள் தொடர்ந்து எழுதும் ஒரு சிலரில் இவரும் ஒருவர். தமிழக வரலாறு, அரசியல் கட்டுரைகள் தாண்டி சுய வரலாறையும் தொடர்ந்து எழுதுகிறார். ஒரு ரிமோட் அண்ணனாய்த்தான் எனக்கு எப்போதும் தோன்றுகிறார்.

பல பேர்களோடு பழகினாலும் எனக்கு  அனுபவங்களைப் பகிரவோ, அசைபோடுடவோ, பிறரது அனுபவங்களையும், பல கதைகளையும் பேசவோ நேரம் வாய்ப்பதில்லை. அக்குறையை இவரது எழுத்துகள் போக்குகின்றன.

அண்ணன் சமீபத்தில் வெளியிட்டுள்ள 5 முதலாளிகளின் கதை மின்னூல், அவரது அனுபவக் குறிப்புகளே. திருப்பூரின் வளர்ச்சியை, அதன் உள்ளே இருந்து ஒரு காரணியாக, வாழ்ந்து வருபவர். அவர் கண்ட ஐந்து முதலாளிகளை நமக்கு அறிமுகம் செய்கிறார். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை இவற்றிற்கு அடிமையானால் என்னவாகும் என்பதை தனக்கே உரிய பாணியில் சொல்லி செல்கிறார்


இது போன்ற அனுபவக் கதைகளுக்கு கதைமாந்தர்களின் பெயர் முக்கியமில்லை. அவர்களின் பழக்கங்கள், செயல்களே முக்கியம். அவ்வாறே பெரிதும் பெயர்கள் இன்றி, நம் அருகில் அமர்ந்து, குளக்கரையிலோ, கோயில் மண்டபத்திலோ, மலையேற்றத்திலோ, உடன் அமர்ந்து கதை சொல்வது போலவே சொல்லிச் செல்கிறார்.


வாழ்க்கை எனும் பெரிய பரமபதம் விளையாட்டில், நற்குணங்கள் எனும் சிறிய ஏணிகளையும், மண்ணாசை-பெண்ணாசை-பொன்னாசை எனும் பெரிய பாம்புகளையும், வளர்த்துக் கொண்டு போகும் முதலாளிகள், வெல்வது எப்படி? பெரிய பலூனை உடைக்க ஒரு சிறு ஊசியும், ஒரு கப்பலை மூழ்கடிக்க ஒரு சிறு துளையும் போதும் என்பதை,  தான் பணிபுரிந்த முதலாளிகளின் கதைகள் வழியே சொல்கிறார்.

ஆர்எஸ் பிரபு அவர்கள் எழுதியது போல, அண்ணன் மேலாண்மை நூல்களாக எழுதினால், பாடப்புத்தகங்கள் ஆகவே வைக்கலாம். தொழில்முனைவோர் அனைவரும் ஜோதிஜி  நூல்களை ஒரு முறை படித்து விடுவது பல்வேறு அபாயங்களிலிருந்து அவர்களை காத்திடும். தொடர்ந்து எழுதி சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் முன்னேராக விளங்கி வர வேண்டுதல்களும்,  வாழ்த்துக்களும்.

மின்னூல் இங்கே வாங்கலாம் - https://www.amazon.in/gp/product/B07ZXJQH4T