Wednesday, January 13, 2016

மென்பொருள் விடுதலை விழா

ஒவ்வொரு நாடும், பிற நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற நாளை
ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடுவர்.


ஆனால், இது என்ன மென்பொருள் விடுதலை விழா? மென்பொருள் துறையில் கூட
அடிமைத்தனம், ஆதிக்கம் போன்றவை உண்டா? ஆமாம். நம் எல்லோரையும் பல்வேறு
பெரு நிறுவனங்கள் தமது மென்பொருள் வழியே அடிமையாக்கி வருகின்றன.

நாம் பணம் கொடுத்து வாங்கும் பொருட்கள் யாவும் நம்முடையவை தானே. நீங்கள்
வாங்கும் ஒரு வாகனத்தை எங்கு வேண்டுமானாலும் ஓட்டிக்கொண்டு
போகலாம்.அதைக்கொண்டு அலுவலகம் மட்டும்தான் போக வேண்டும்.
கடைத்தெருவிற்கோ, கடற்கரைக்கோ, உறவினர் வீட்டுக்கோ போகக்கூடாது என்று
யாரும் கட்டுப்படுத்த முடியாது.

ஆனால், மென்பொருள் உலகில் Home Edition, Academic Edition, Professional
Edition என ஒவ்வொரு வகைப் பயன்பாட்டுக்கும் தனி வெளியீடு. தனி விலை.
கல்லூரியில் பயன்படுத்தும் ஒரு மென்பொருளை வீட்டுக்குக் கொண்டுவரக்
கூடாது. நீங்கள் போகும் இடங்களுக்கேற்ப தனித்தனி வாகங்கள் வாங்கி
ஓட்டுவீர்களா?

உங்கள் வாகனத்தை நீங்கள் ஓட்டலாம். நண்பருக்கு இரவல் தரலாம். உறவினர்,
குடும்பத்தினருக்கு இனாமாகத் தரலாம். யாருக்கேனும் பாதி விலைக்கு
விற்கலாம். முற்றிலும் பழுதடைந்து விட்டால், தனித்தனி பாகங்களாகப்
பிரித்து, பழைய பொருட்கள் விற்பனைக் கடையில் விற்கலாம்.

ஆனால், நீங்கள் வாங்கிய மென்பொருளை அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா,
தங்கை, உறவினர், நண்பர் என யாருக்கும் தரக்கூடாது. தந்தால் அது திருட்டு
(Piracy) நீங்கள் திருடர். சட்ட ரீதியாக தண்டனைக்குரிய குற்றம் இது.

இந்தக் கட்டுப்பாடுகள் ஏன்? நமக்கு உடமையான ஒரு பொருளை நாம் யாருக்கும்
தரலாம்தானே. பகிர்ந்து வாழ்வது தானே மனித சமுதாயம்! சிறு வயதில்
சாக்லேட், பேனா, பென்சில் என பகிர்ந்திருப்போமே. கல்லூரி நண்பர்கள்
ஆடைகளைக்கூட பகிர்வதைக் காணலாம்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

- குறள் 322

என்கிறார் வள்ளுவர். அடிப்படைத்தேவையான உணவைக் கூட, பகிர்ந்து உண்ணவே சொல்கிறார்.

மென்பொருளை மட்டும் பகிரவே கூடாதாம்.


உங்கள் வாகனத்தில் சிறு பழுது. என்ன செய்வீர்கள்? அருகில் உள்ள பழுது
நீக்கும் நிலையம் சென்று சரி செய்து கொள்வீர்கள். இயந்திரவியல்
தெரிந்தால் நீங்களே கூட சரி செய்து கொள்ளலாம். வாகனம் பற்றி விரிவாக
அறிய, நீங்களே வாகனத்தை பிரித்து மாட்டி, கற்றுக் கொள்ளலாம்.

மென்பொருளில் ஒரு பழுது என்றால்? அதை உருவாக்கிய நிறுவனத்திடம் தான்
புகார் அளிக்க முடியும். அவர்கள் அதை சரிசெய்ய சில ஆண்டுகள் ஆகலாம்.
பெரும்பாலும் சரி செய்வதே இல்லை. ஆனால் வேறு புதிய பதிப்பை வாங்கச்
சொல்லி வற்புறுத்துவர்.

உங்கள் வாகனம் பஞ்சர் ஆனால் சரி செய்ய முயல்வீர்களா? புது வாகனம் வாங்க
யோசிப்பீர்களா?

நீங்கள் மென்பொருள் துறையில் வேலை செய்து, அதன் நுட்பங்களை
அறிந்திருந்தாலுமே, நீங்கள் வாங்கும் மென்பொருளை உங்களால் பழுதுபார்க்க
முடியாது. ஒரு மெக்கானிக்கிடம் போய், அவரால் பஞ்சர் கூட ஒட்ட முடியாத,
ஒரு வாகனத்தை, அவரிடம் யாரால் விற்க முடியும்? ஆனால் மென்பொருள்
நிறுவனங்கள் இதைத்தான் செய்கின்றன.

இவ்வளவு கட்டுப்பாடுகள் கொண்ட மென்பொருட்களின் விலைகளைப் பார்ப்போமா?

சில பிரபர மென்பொருட்களின் விலைப்பட்டியல்.


விண்டோஸ் இயக்குதளம் 10,000
visual studio – 1,50,000
MS OFfice – 10,000
Photoshop 50,000
Oracle server – 1,50,000
Oracle client – 6000


இவ்வாறு சுமார் 50,000 ரூபாய் விலை உள்ள கணிணியில் நிறுவும்
மென்பொருட்களின் விலை மட்டுமே சில லட்சங்கள். இது ஒரு கணிணிக்கான விலை
மட்டுமே. 100 கணிணிகள் இருந்தால் 100 மடங்கு விலை. மொத்தமாக வாங்கினால்,
சிறிது குறையலாம்.

இந்தியா முழுதும் எத்தனை கணிணி நிறுவனங்கள்? எத்தனை கணிணிகள்?
மென்பொருளுக்காக மட்டும் இந்தியா செய்திருக்கும் செலவில், புது நாட்டையே
உருவாக்கியிருக்கலாம்.
 
அட. நான் இதுவரை எந்த மென்பொருளையும் வாங்கியதில்லையே. திருடித்தானே
வருகிறேன். என்ன பிரச்சனை என்கிறீர்களா? பெரு நிறுவனங்கள் தனி நபர்கள்
செய்யும் திருட்டைக் கண்டுகொள்வதில்லை. அப்போதுதான் எங்காவது வேலைக்குப்
போனால், அதே மென்பொருளையே கேட்பீர்கள். நிறுவனங்கள் திருட்டு செய்ய
இயலாது. உங்களுக்காக அவை பணம் கொட்டி, அந்த மென்பொருளை வாங்கித்
தருகின்றன.

இவ்வாறு இந்தியர்களின் பணம், ஆண்டுதோறும் பல்வேறு நிறுவனங்களுக்கு கப்பம்
கட்டியே செலவாகின்றது. பல்லாயிரக்கணக்கில் கொட்டி வாங்கும்
மென்பொருளுக்கு நம்மிடம் எந்த உரிமையும் இருப்பதில்லை.

இது அடிமைத்தனம் தானே.

இது போல எந்த உரிமையும் தராமல், நம்மை அடிமைப்படுத்தும் மென்பொருட்களை
‘தனியுரிம மென்பொருட்கள்’ Properitory Software என்கிறோம். இவை மனித
சமுதாய வளர்ச்சிக்குத் தீங்கானவை. அறிவுப் பரவலை தடுப்பவை. சக்கரம்
கண்டுபிடித்தவன் இன்றுவரை உருவான ஒவ்வொரு சக்கரத்திற்கும் உரிமை
கொண்டாடியிருந்தால், உலகின் பெரு நிறுவனமாகி இருக்கலாம். ஆனால் மனித
சமுதாயம் வளர்ந்திருக்காது.


பெருநிறுவனங்களிடம் அடிமைப்பட்டிருக்கும் மனித சமுதாயத்திற்கு விடுதலை
தர, மக்களால், மக்களுக்காக உருவாக்கப் பட்டவையே ‘கட்டற்ற மென்பொருட்கள்’
Free Software. இங்கு Free என்பது இலவசம் அல்ல. Freedom.

இந்தக் கட்டற்ற மென்பொருட்கள் தனி நிறுவனங்களின் சொத்து அல்ல. உலக மக்கள்
யாவருக்கும் உரியவை. மனித சமுதாயத்தின் மேல் கொண்ட எல்லையற்ற அன்பினால்,
பல்லாயிரம் கணிணி வல்லுனர்கள் உலகெங்கும் இருந்து ஒன்றாக இணைந்து
கணிணிக்குத் தேவையான எல்லா மென்பொருட்களையும் உருவாக்கி, கட்டுப்பாடுகள்
ஏதும் இல்லாமல் கட்டற்ற மென்பொருட்களாக வெளியிட்டு வருகின்றனர்.

இவை 4 உரிமைகளுடன் வருகின்றன.

1.எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தும் உரிமை

ஒரே பதிப்புதான். Academic, Home, Professional edition எதுவும் இல்லை.
எங்கும் பயன்படுத்தலாம்.

2. யாவருடனும் பகிரும் உரிமை

உங்களிடம் உள்ள ஒரு கட்டற்ற மென்பொருளை யாவருடனும் பகிரலாம். பல்லாயிரம்
பிரதிகள் எடுக்கலாம். நேரில் தரலாம். மின்னஞ்சலில் அனுப்பலாம். உங்கள்
இணையதளத்தில், Torrent ல் என எங்கும் பகிரலாம்.

3. நீங்களே பழுது நீக்கலாம். மேம்படுத்தலாம்

மென்பொருளில் உள்ள பழுதுகளை நீக்க, அதன் மூலநிரல் (Source Code)
வேண்டும்.கட்டற்ற மென்பொருட்கள் மூல நிரலுடனே பகிரப் படுகின்றன. யாவரும்
மூல நிரலைப் பெற்று, படித்துப் புரிந்து கொள்ளலாம். பழுது நீக்கலாம்.
புதிய கூறுகளைச் சேர்த்து மேம்படுத்தலாம். உங்களுக்குத் தேவையான படி,
நீங்களே மாற்றிக் கொள்ளலாம். உங்களுக்கு நிரலாக்கம் (Programming)
தெரியவில்லையா? கவலை வேண்டாம். நம் நாட்டில் நிரலாளர்கள்தான் எங்கும்
உள்ளனரே. கணிணி மாணவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களை வைத்து
மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.

4. மாற்றங்களை புதிய பதிப்பாக வெளியிடலாம்

நீங்கள் திருத்திய, பழுது நீக்கிய, மேம்படுத்திய ஒரு மென்பொருளை, புதிய
பதிப்பாகக்கூட வெளியிடலாம். புதிய பெயரில் கூட.

இவ்வாறு நீங்கள் வெளியிடும், பகிரும் மென்பொருட்களை இதே உரிமைகளோடு, மூல
நிரலுடன் வெளியிட வேண்டும். இலவசமாகத் தரலாம். பணத்திற்கும் விற்பனை
செய்யலாம்.

இந்தக் கட்டற்ற உரிமைகள் ‘பொது மக்கள் உரிமை’ (General Public License -
GPL) எனப்படுகின்றன.

நீங்கள் தனியுரிம மென்பொருட்கள் நிறுவும் போது, EULA(End User License
Agreement) க்கு  I Agree என்பீர்கள். அது உங்களை அடிமைப்படுத்தும் ஒரு
அடிமைப்பத்திரம். கட்டற்ற மென்பொருட்களை நிறுவும் போது, GPL க்கு I Agree
என்பீர்கள். அது உங்கள் விடுதலைப்பத்திரம்.


தனியுரிம மென்பொருட்களால் அடிமைப்பட்டிருக்கும் மக்களுக்கு, கட்டற்ற
மென்பொருட்களால் விடுதலை தரும் இந்த விடுதலைப் போராட்டம், 1983 ல்
தொடங்கியது. இதை GNU (GNU Not Unix) என்ற மென்பொருள் தொகுப்புகளோடு
தொடங்கியவர் ரிச்சர்ட் ஸ்டால்மன். Richard M Stallman (RMS). அவர்
தொடங்கிய இந்த இயக்கம், இன்று கற்பனைக்கும் எட்டாத அளவில் வளர்ந்து, பல
கோடி கட்டற்ற மென்பொருட்களைத் தந்துள்ளது.

download (15)
Richard M Stallman

 

இயக்குதளம் – GNU/Linux
ஆபிஸ் – LibreOffice
நிரலாக்கம் – PHP/Python/Ruby/C/C++
வரைகலை – GIMP, Inkscape
3D – Blender
வீடியோ எடிட்டிங் – OpenShot, Kdenlive, ffmpeg
ஆடியோ எடிட்டிங -Audacity

இது போல, உங்கள் தேவைகள் அனைத்திற்கும் கட்டற்ற மென்பொருட்கள் கிடைக்கின்றன.

உபுண்டு(Ubuntu), லினக்ஸ் மின்ட் (Linux Mint) போன்ற குனு/லினக்ஸ்
பதிப்புகள், நல்ல அழகான,எளிய இடைமுகப்புடன் தனிநபர்களாலும் பெரு
நிறுவனங்களாலும் பயன்படுத்தப் படுகின்றன.


இது மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் ஒரு விடுதலைப் போராட்டம்.
இன்னும் பல்லாயிரம் பேர் தனியுரிம மென்பொருட்களால் அடிமைப் படுத்தப்
பட்டுள்ளனர். அவர்களுக்கு கட்டற்ற மென்பொருட்களை அறிமுகம் செய்ய,
உலகெங்கும் செப்டம்பர் 17 அன்று ‘மென்பொருள் விடுதலை விழா’ (Software
Freedom Day) கொண்டாடப் படுகிறது.
 
download
 
பல்வேறு தன்னார்வக்குழுக்கள் பொது இடங்கள், பள்ளி, கல்லூரி,
நிறுவனங்களில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரை, உரையாடல், கண்காட்சி,
விளக்கவுரைகள், நடத்தி வருகின்றனர்.

‘என் தங்கம், என் உரிமை’ போன்ற விளம்பரப் போராட்டம் அல்ல இது. ‘நம்
மென்பொருள், நமது உரிமை’ என்ற உரிமைப் போராட்டம்.

உங்கள் ஊரிலும் கட்டற்ற மென்பொருள் பற்றிய அறிமுக உரைகள், பயிலரங்குகள்,
பயிற்சிகள் நடத்த அருகில் உள்ள GNU/Linux Users Group ஐ அணுகுங்கள்.
அல்லது எனக்கு எழுதுங்கள்.

எல்லாம் சரி. எல்லா மென்பொருட்களையும் இலவசமாகவே, மூல நிரலுடன் தந்து
விட்டால், எப்படி காசு பார்ப்பது?

கட்டற்ற மென்பொருட்களை இலவசமாகவே தர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நல்ல
விலைக்கும் விற்கலாம். Redhat, CollabNet போன்ற பல நிறுவனங்கள் கட்டற்ற
மென்பொருட்களை  கூடுதல் வசதிளோடு விற்கின்றன.

அது சரி. மூல நிரல் தந்துவிட்டால், எல்லாரும் திருடி விற்பார்களே. பின்
எப்படி வியாபாரம் செய்வது?

உங்களுக்கு சமைக்கத் தெரியுமா? உங்கள் வீட்டில் யாருக்காவது சமையல்
தெரியும் தானே. இணையத்தில் பல்லாயிம் தளங்கள் தினமும் புது சமையல்
குறிப்புகளைத் தருகின்றன. சமையல் நூல்கள்எங்கும் விற்கப் படுகின்றன.
ஆனாலும் தெருவெங்கும் உணவகங்கள். சாலையோரக்கடை முதல் 5 நட்சத்திர உணவகம்
வரை எல்லோருக்கும் தெரிந்த சமையல் குறிப்புகளைக் கொண்டே, பெருமளவில் பணம்
சம்பாதித்துக் கொண்டுதானே இருக்கின்றனர்.

ஐஐயோ. சமையல் குறிப்புகள் எல்லாருக்கும் தெரிந்து விட்டன. இனி பிழைக்க
முடியாது என ஒரு உணவகமாவது மூடப்பட்டுள்ளதா? ஒரு உணவக உரிமையாளருக்கு
உள்ள தைரியம் ஏன் மென்பொருள் நிறுவன உரிமையாளர்களுக்கு இருக்கக்கூடாது?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


••••••••

மலைகள் இதழ் 82 ல் எழுதிய கட்டுரை.
http://malaigal.com/?p=7316


உங்கள் புகைப்படங்களைப் பகிரலாமா?

இன்றைய நவீன வாழ்வு நமக்கு அளித்துள்ள பெரும் வசதிகளில் ஒன்று புகைப்படங்கள். பிலிம் ரோல்களைப் பயன்படுத்தி, படம் எடுத்து, சில மாதங்கள் கழித்து, நிறைய பணம் செலவழித்து அவற்றை அச்சடித்து பார்த்து மகிழ்ந்த காலங்கள் இனிய நினைவுகளாகி விட்டன.

திறம்மிக்க DSLR முதல் Point & Shoot அல்லது கைபேசிக்காமிரா வரை அவரவர் வசதிக்கேற்ற கருவிகளில் இன்று படம் எடுத்து மகிழ்கிறோம். உடனுக்குடன் பார்க்கும் வசதி, கருவிகளிலேயே மெருகேற்றும், திருத்தும் வசதி, இணையத்தில் பகிரும் வசதி என மன்னர்களுக்குக் கூட இல்லாத வசதிகள் இன்று சாமானியருக்கும் கிடைக்கின்றன.

நாம் உண்ணும் உணவு, பார்க்கும் இடங்கள், நண்பர்கள் என அனைத்தையும் சுட்டுத் தள்ளி விடுகிறோம். Facebook, Flickr, Instagram, 500px, snapchat எனப் பல தளங்களில் பகிர்ந்து Like களுக்காகத் தவம் இருக்கிறோம்.

இவ்வாறு நாம் எடுக்கும் புகைப்படங்களை, பிறர் தமது வலைப்பதிவுகளிலோ, நூல், மின்னூல்களிலோ பயன்படுத்த அனுமதிக்கிறோமா?
பெரும்பாலோர் அனுமதிப்பதில்லை.  © Copyright என்று அறிவித்து விட்டு, படங்களின் மறுபயன்பாட்டைத் தடுத்து விடுகிறோம்.

இவ்வாறு அனுமதி மறுப்பதால் பலவகையான இழப்புகள் ஏற்படுகின்றன. சில உதாரணங்களைக் காண்போம்.

திரு.சகாயம் IAS அவர்களைப் பற்றி ஒரு மின்னூல் உருவாக்கத் திட்டமிட்டு இருந்தோம். அவர் படங்களை இணையத்தில் தேடினால், காப்புரிமை கொண்ட படங்கள் மட்டுமே கிடைக்கின்றன. search.creativecommons.org தளத்தில் பகிரும் உரிமை உள்ள படங்கள் கிடைக்கும். அதில் தேடினால், விக்கிப்பீடியாவில் உள்ள ஒரே ஒரு சின்ன படம் மட்டுமே கிடைக்கிறது.

இதே போல யோகாசனம் பற்றிய மின்னூலுக்கும் போதிய படங்கள் கிடைக்கவில்லை.

இறையன்பு IAS, நடிகர் விஜயகாந்த், பாடகர் SPB, இசைஆனி இளையராஜா போன்றோருக்கும் ஒரு சில படங்கள் மட்டுமே கிடைக்கிறது. அதுவும் 200×200 போன்ற சிறிய அளவிலேயே கிடைக்கின்றன. images.google.com ல் தேடினால், எல்லாப் படங்களும் உயர்தரத்தில் கூட கிடைக்கின்றன. ஆனால் அவை காப்புரிமை எனும் விலங்கினால் கட்டப்பட்டுள்ளன. http://www.google.com/advanced_image_search ல் usage rights: free to use or share தந்து தேடிப்பாருங்கள்.

உலகின் அறிவையெல்லாம் கட்டற்ற உரிமையில் தொகுக்கும் விக்கிப்பீடியாவின் கட்டுரைகளில் ஏதேனும் படங்களைச் சேர்க்க, அவை Creative Commons Attribution ShareAlike என்ற உரிமையில் இருத்தல் வேண்டும். இந்த உரிமையில் படங்கள் கிடைக்காததால், பெரும்பாலான கட்டுரைகள் படங்கள் இல்லாமலேயே எழுதப் படுகின்றன. இது சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்குப் பெரும் இழப்பு தானே.

சில கேள்விகளும் பதில்களும்

நான் படங்களை இணையத்தில் ஏற்றுவதே பிறர் பகிரத்தானே. ஏன் தனியாக உரிமம் பற்றி சொல்லவேண்டும்?

உரிமம் பற்றி சொல்லாத படங்கள், தாமாகவே காப்புரிமை விலங்கு பெறுகின்றன. பிறர் பகிரவும் பயன்படுத்தவும் விரும்பினால் Creative Commons  உரிமையை சொல்ல வேண்டும்.

Creative Commons உரிமை என்றால் என்ன?

உங்கள் படைப்புகளை பிறர் பகிரவும், பயன்படுத்தவும் தரும் அனுமதியே இது.  மேலும் அவற்றில் மாறுதல் செய்யலாமா? கூடாதா?, வணிகரீதியில் பயன்படுத்தலாமா? கூடாதா? என்றும் வரையறுக்கலாம். இதற்கேற்ப பின்வரும் 6 உரிமைகள் உள்ளன.

பிறர் உங்கள் படைப்புகளைப் பயன்படுத்தும் போது, உங்கள் பெயரை கட்டாயம் சொல்லியாகவேண்டும். எனவே படைப்புத் திருட்டு பற்றி பயப்படவேண்டாம்.

சிலர் எனது படங்களைத் திருடி, தம் பெயரில் வெளியிட்டால் என்ன செய்வது?
சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கலாம். அந்தந்த நாட்டு சட்டங்களை இந்த creative commons உரிமைகள் ஆதரிக்கின்றன.

இணையத்தில் திருட்டைத் தடுக்க இயலாது. ஆனால் 100% விதிகளுக்கு உட்பட்டே பகிரவிரும்பும் நண்பர்களுக்கு உங்கள் படைப்புகள் உதவட்டுமே. உங்கள் படங்கள் விக்கிப்பீடியா பக்கங்களிலும், பல வலைப்பதிவுகள், நூல்கள், மின்னூல்களில் உங்கள் பெயருடன் பகிரப்படுவது மகிழ்ச்சிதானே.

எப்படி creative commons படங்களைத் தேடுவது?

search.creativecommons.org
https://www.flickr.com/creativecommons/
images.google.com போன்றவற்றில் பகிரும் உரிமை கொண்ட படங்களைத் தேடலாம்.

சரி, நான் என்ன செய்ய வேண்டும்?

* உங்கள் படங்களை commons.wikimedia.org ல் பதிவேற்றுங்கள்.

* Flickr ல் உரிமைப் பகுதியில் creativecommons  தெரிவு செய்யுங்கள்
http://www.wikihow.com/Apply-the-Creative-Commons-License-to-Flickr-Photographs

* Google+ images  ல் உரிமைப் பகுதியில் creativecommons  தெரிவு செய்யுங்கள்
http://www.stevegillphotos.co.uk/2012/03/using-creative-commons-license-on.html

இவ்வாறு பகிர்வதால் உங்கள் பெயரும் படங்களும் பரவுவதோடு, வணிகவாய்ப்புகளும் கிடைக்கும்.

உலக அளவில் புகழ் பெற்ற காட்டுயிர் புகைப்படக்கலைஞர், கல்யாண் வர்மா, தம் படங்களை கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிடுவதால் பெறும் பலன்களை TED உரையில் விளக்கும் காணொளி இதோ.
http://www.inktalks.com/discover/117/kalyan-varma-free-art-is-profitable

உங்கள் புகைப்படங்களும் சமுதாய முன்னேற்றத்திற்குப் பயன்பட அனுமதியுங்கள். பகிர்தலை ஆதரியுங்கள்.

ஐயங்களுக்கு தயங்காமல் எழுதுக.

••••••••

மலைகள் இதழ் 81 ல் எழுதிய கட்டுரை.
http://malaigal.com/?p=7205

கூகுளின் இலவச எழுத்துணரி

பழைய அச்சு நூல்களைப் பாதுகாக்க ஒரு எளிய வழி, அவற்றை ஒரு ஒளி வருடி (scanner) ல் வருடி, உயர்தரப் படங்களாக சேமித்து வைப்பது. இவ்வாறு மின்மயமாக்கும் பணியை (Digitization) பலரும் பல்வேறு இடங்களில் இயன்ற போது செய்து வருகின்றனர். தமிழ் இணையக் கல்விக் கழகம், தமிழ் மரபு அறக்கட்டளை போன்ற அமைப்புகளும், பொள்ளாச்சி நசன் போன்ற தனியாரும் செய்து வருகின்றனர்.

விலை குறைந்து வரும் ஒளி வருடிக் கருவிகளும் camscanner போன்ற திறன்பேசிச் செயலிகளும் கொண்டு இன்று ஆர்வம் உள்ள எவரும் அச்சு நூல்களை மின்னூலாக்கி விடலாம்.

பொதுவாக இந்த மின்னூல்கள் JPEG அல்லது PDF வடிவிலேயே சேமிக்கப் படுகின்றன. மின்னூல்களின் உண்மையான பயன்கள் அவை உரை வடிவில் இருந்தால் மட்டுமே கிடைக்கும். Epub, Mobi, HTML போன்ற வடிவங்களுக்கு மாற்றுதல், மின்னூல் படிப்பான் (Ebook reader), திறன்பேசிகள் போன்ற கருவிகளில் படித்தல், நூல்களுக்குள் தேவையான வார்த்தைகளைத் தேடுதல் போன்றவற்றை PDF ல் செய்ய இயலாது.

ஒரு PDF ஐ உரை வடிவில் மாற்ற, தட்டச்சு செய்வது தான் ஒரே சிறந்த வழியாக இருந்து வருகிறது. PDF ல் இருந்து உரையை அப்படியே பிரித்தெடுக்கும் முறை இருந்தால் நன்றாக இருக்கும் என்பது ஒரு நெடு்ங்கனவு. இதற்கு OCR – Optical character recognition என்று பெயர். ஆங்கிலத்தில் tesseract OCR என்ற கட்டற்ற மென்பொருள் இதை சிறப்பாக செய்கிறது.

தமிழில் ஒளி உணரிக்கான தேவையும் ஏக்கமும் வெகு காலமாகவே உள்ளது. Tesseract OCR க்கு வெவ்வேறு தமிழ் எழுத்துருக்களை அறிமுகப்படுத்தும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. என் நண்பர் பாலவிக்னேஷ் அந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளார். 
kbalavignesh@gmail.com
https://printalert.wordpress.com/2014/10/28/tesseract-training-more-fonts/


இது தவிர பொன் விழி எனும் OCR மென்பொருளும் learnfun நிறுவனத்தால் விற்கப்பட்டுகிறது.
http://learnfunsystems.com/products/tamil.htm

மத்திய அரசும் OCR ஆய்வு செய்து வருகிறது. (IISc, Banglore) ஆய்வுகளுக்கும் தனியார் அமைப்புகளுக்கும் மட்டும் வழங்கப் படுகிறது.
மக்கள் பணத்தில் நடக்கும் ஆய்வுகளும் மென் பொருட்களும் பொது மக்களுக்கு மறுக்கப்படுவது விந்தையே.

ஆங்கிலத்தில் மொழி சார் மென்பொருட்களான சொற்பிழைத் திருத்தி, இலக்கணப் பிழைத் திருத்தி,OCR, Text to speech, speech to text போன்றவை சிறப்பாக இருக்க முக்கியக் காரணம் அவற்றின் மீதான ஆய்வுகளும் மென் பொருட்களும் கட்டற்ற முறையில் மூலநிரலுடன் பொது மக்களுக்கு எளிதில் கிடைப்பது தான். அரசு நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் தமது படைப்புகளை மக்களுக்கு மூல நிரலுடன் அளிக்கின்றன. அவற்றைப் பலரும் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றனர்.

தமிழிலோ நிலைமை தலைகீழ். அரசும் பல்கலைக் கழகங்களும் தம் மென்பொருட்களையும் ஆய்வுகளையும் யாருக்கும் தருவதில்லை. ஆய்வு அறிக்கையும் மென் பொருட்களும்  பீரோவில் பூட்டி வைக்கப் படுகின்றன. இதே ஆய்வு மீண்டும் வேறு ஒரு அரசுத் துறையில், வேறு பல்கலைக்கழகத்தில் மீண்டும் பெரும் பொருட்செலவுடன் தொடங்கும். பிறகு பீரோவில் ஒளிந்து கொள்ளும்.

இதனால்தான் தமிழுக்காக அதிக மென்பொருட்கள் இல்லை.  தமிழ்நாட்டில் மென்பொருள் துறையில் வேலை செய்பவர்கள் இல்லாத ஊரே இல்லை எனலாம். ஆனாலும் ஒரு சிறந்த சொற்பிழைத் திருத்தியோ, இலக்கணப் பிழைத் திருத்தியோ இல்லை. நாம் படிக்கும் செய்தித்தாள்களில், விளம்பரங்களில், இணையப் பக்கங்களில், சுவரொட்டிகளில் எழுத்துப்பிழை கண்டால், ஒவ்வொரு மென்பொருள் வல்லுனரும் வெட்கப்பட வேண்டும்.

தற்போது மொழியியல் ஆய்வுகளில் கூகுள் போன்ற நிறுவனங்களும் விக்கிமீடியா போன்ற அமைப்புகளும் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றன.

சமீபத்தில் தமிழர்களின் நெடுநாள் கனவான OCR, எழுத்துணரியை கூகுள் இலவசமாக வெளியிட்டுள்ளது. Google Drive ல் ஒரு படத்தை ஏற்றி, அதை Google Doc ஆகத் திறந்தால் OCR செய்யப்பட்டு, படமும் அதற்கான உரையும் கிடைக்கிறது. தமிழ் உள்ளிட்ட 200 மொழிகளில் கிடைக்கிறது.

இதற்கான செய்முறை இதோ.


http://www.thewindowsclub.com/google-drive-convert-image-to-text

Google Drive இல் 2MB இற்கு குறைவான படக்கோப்பினை தரவேற்றம் செய்யுங்கள் .பின்னர் அந்த கோப்பில் வலது கிளிக் செய்து Google Doc ஊடாக திறந்தால் அது சொற்கோப்பாக மாறிவிடும்

மேலதிக உதவி
https://support.google.com/drive/answer/176692?hl=en

மாற்றப்பட்ட எடுத்துக்காட்டான கோப்புகள்
https://docs.google.com/document/d/1OXre4-phQOayE0wyGTttQq-eD3Djt_alsuhkmS8BeRI/edit
https://docs.google.com/document/d/12_6eTMMrDbWcVMQIvv8kGFbHizYcG8_ca4OieBbKjUw/edit


இது சிறப்பாக வேலை செய்ய, படம் குறைந்தது 300 DPI ஆவது இருக்க வேண்டும். அதற்கும் குறைவாக இருந்தால் எழுத்துக்கள் சரியாக வருவதில்லை.

இதுவரை வந்த எழுத்துணரி மென்பொருட்களில் பெருமளவு சிறப்பாக இருப்பது இதுவே. ஒரு பெரிய நூலின் ஒவ்வொரு படமாக ஏற்றி, அதை OCR செய்து உரையாக மாற்றி சேமிப்பது கடினம். அதை தானியக்கமாகச் செய்ய ஒரு மென்பொருள் உருவாக்கியுள்ளேன். லினக்ஸ் இயங்குதளத்தில் பைதான் மொழியில் எழுதினேன். கட்டற்ற மென்பொருளான இதன் மூலநிரலை இங்கே பதிவிறக்கலாம்.
https://github.com/tshrinivasan/google-ocr-python
இதனை மேம்படுத்தவும், பிற இயக்குதளங்களுக்கு மாற்றவும் விரும்புவோர் செய்து கொள்ளலாம்.

உங்களிடம் உள்ள எல்லா PDF ஆவணங்களையும் உரையாக கூடிய விரைவில் மாற்றிக் கொள்ளுங்கள். தன் சேவையை கூகுள் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி விடலாம். Orkut, RSS reader, Buzz, code search, wave என தன் சேவையை மூடுவது கூகுள் வழக்கமாகச் செய்யும் ஒன்று.

தமிழுக்கென கட்டற்ற மென்பொருளாக ஒரு OCR உருவாக்குவது,  Tesseract OCR க்கு தமிழைப் பயிற்றுவிப்பது போன்றவையே நல்ல, நிரந்தரத் தீர்வுகள். ஆர்வமுள்ளோர் எனக்கு எழுதுங்கள். இணைந்து பணியாற்றி நம் கனவுகளை நாமே நனவாக்குவோம்.
http://www.youtube.com/watch?v=PH9TnD67oj4
 ••••••••

மலைகள் இதழ் 83 ல் எழுதிய கட்டுரை.
http://malaigal.com/?p=7382

மின்னூல் உலகம்


https://pixabay.com/static/uploads/photo/2014/07/01/12/37/kindle-381242_960_720.jpg

இணையத்தின் வளர்ச்சிக்குப்பின், மின்னூல்களின் புதுயுகம் வந்துள்ளது. அச்சு நூல்கள் உருவாக்க ஆகும் காலம், உழைப்பு, பணம், விற்பனைச் சிக்கல்களுக்கு, தொழில்நுட்ப வளர்ச்சி தரும் தீர்வு மின்னூல்கள்.

மின்னூல் படிக்கும் கருவிகள்

HTML வடிவில் இணையதளங்களில் உலாவி(Browser) மூலமும் PDF வடிவிலும் கணிணியில் மின்னூல் படித்த காலங்கள் போய், இப்போது மின்னூல்களைப் படிப்பதற்கென்றே சிறப்புக் கருவிகள் உள்ளன. அமேசான் கிண்டில், நூக், சோனி, கோபோ போன்ற பல கருவிகள் சந்தையில் பல்வேறு திரை அளவுகளில் கிடைக்கின்றன. இவற்றில் பெரும்பாலும் E-Ink என்ற சிறப்புத் திரை உள்ளது. இது காகிதத்தில் படிப்பது போன்ற இனிமையைத் தருகிறது. டேப்லட், கணிணி, திறன்பேசி போன்றவற்றில் உள்ள LCD திரையானது, ஓரிரு மணிகள் கூட, தொடர்ந்து படிக்கவிடாமல், கண்களுக்கு சோர்வு தருகின்றன. ஆனால் E-Ink திரையானது, அச்சு நூல் தரும் அதே இனிமையைத் தருவதால், பல மணி நேரங்கள் சோர்வின்றிப் படிக்க முடிகிறது.

பேட்டரியை காலி செய்யும் திறன்பேசிகள் போலன்றி, ஒரு இரவு முழு சார்ஜ் செய்தாலே, ஒரு மாதம் முதல் இரு மாதங்களுக்கு தொடர்ந்து செயல்படவல்லவை இந்தக் கருவிகள்.

திறன்பேசிகளிலும் மின்னூல்கள் படிக்கலாம். ஆனால், நம் குரங்கு மனம், சிறிது நேரத்திலேயே அதில் மின்னஞ்சல் பார்க்கவோ, சமூக ஊடக செயலிகளை இயக்கவோ, தூண்டும். நொடிக்கொரு முறை notification வந்து ஆசை காட்டும். மின்னூல் படிக்கும் கருவிகளில், இந்தத் தொல்லை இல்லவே இல்லை. நீங்களும் நூலாசிரியரும் மட்டும்தான். நூல்களில் உலகில் நீங்கள் தடையின்றி உலாவிக் கொண்டிருக்கலாம்.

இந்தக் கருவிகள் பெரும்பாலும் 6 அங்குலத் திரை அளவில் கிடைக்கின்றன. 5 அல்லது 7 அங்குல அளவிலும் சில நாடுகளில் கிடைக்கின்றன. 2GB/4GB கொள்ளளவில் கிடைப்பதால் உங்கள் பாக்கெட்டில் ஒரு நூலகத்தையே கொண்டு செல்லலாம்.


மின்னூல் வகைகள்


கணிணியில் நாம் படிக்கும் A4 அளவு PDF கோப்புகளை, இந்தக் கருவிகளில் படிக்க இயலாது. இவற்றுக்கென்று சிறப்பு கோப்பு வகைகள் உள்ளன.

mobi

அமேசான் நிறுவனம், தன் கிண்டில் கருவிகளில் படிப்பதற்கேற்ப mobi என்ற புது கோப்பு வகையை அறிமுகம் செய்தது. இது கிண்டில் கருவி/மென்பொருளில் மட்டும் இயங்கும்.

epub

mobiக்கு மாற்றான ஒரு திறந்தமூல வகையான கோப்பு இது. பல HTML கோப்புகளை ஒன்று சேர்த்து zip செய்த வடிவமே இது.

இதை கிண்டில் தவிர பிற கருவிகளான nook, kobo, sony போன்றவை ஆதரிக்கின்றன. ஆன்டிராய்டில் fbreader, ஆப்பிள் கருவிகளில் iBooks, குனு/லினக்ஸ், விண்டோஸில் fbreader, readium.org(chrome plugin) மூலம் எல்லாக் கருவிகளிலும் படிக்கலாம்.

PDFல் இருப்பது போல, இந்தக் கோப்புகளில், பக்கஅளவு ஏதும் இல்லை. 3 அங்குல மொபைல் முதல் மிகப் பெரியகணிணித் திரைகளிலும் படிக்கும் வகையில், திரை அளவிற்கேற்ப தம் நீள, அகலத்தை மாற்றிக் கொள்கின்றன.

மேலும் எழுத்துரு அளவையும் நாம் விரும்பும் வகையில், ஏற்றி இறக்கிப் படிக்கலாம்.


எங்கே மின்னூல் வாங்கலாம்?


amazon.com, store.kobobooks.com, www.nook.com/gb/store/books, Google Play Books போன்ற தளங்களில் மின்னூல்கள் வாங்கலாம். இவை பெரும்பாலும் DRM என்ற கைவிலங்குடன் வருவதால், நூல்களை அந்தக் கருவிகளில் மட்டுமே படிக்க முடியும். பிறருக்குப் பகிர இயலாது.

இவை தவிர,

http://www.gutenberg.org/

http://archive.org/details/texts

http://openlibrary.org/

போன்ற தளங்களில் பல்லாயிரம் ஆங்கில நூல்கள் இலவசமாகவே கிடைக்கின்றன.


மின்னூல் உருவாக்கம்


அமேசான் போன்ற மின்னூல் தளங்களில், தினமும் பல்லாயிரம் நூல் ஆசிரியர்கள் தம் மின்னூல்களைத் தாமே உருவாக்கி, வெளியிட்டு வருகின்றனர். உரை ஆவணமாக நூலை எழுதியவுடன், epub, mobi வடிவங்களில் மாற்ற PressBooks.com, Sigil, Calibre போன்ற அட்டகாசமான, இலவச கட்டற்ற மென்பொருட்கள் உள்ளன.

PressBooks.com மூலம் மின்னூல் உருவாக்குவதைத் தமிழில் விளக்கும் காணொளி –
தமிழில் மின்னூல்கள்

கிண்டில், நூக், கோபோ என எந்த ஒரு கருவியும், தமிழை ஆதரிப்பதில்லை. kindle paperwhite ல் மட்டும் ஒரு நகாசு வேலை செய்து தமிழ் mobi கோப்புகளைப் படிக்கலாம்.

விவரங்கள் இங்கே-.

http://freetamilebooks.com/how-to-fix-tamil-in-kindle-paperwhite/

ஆனால் 6 inch PDF கோப்புகளை நாமே உருவாக்கி, மின்னூல் கருவிகளில் படிக்கலாம். LibreOffice, Firefox, k2pdfopt போன்ற கட்டற்ற மென்பொருட்கள் இதற்கு உதவுகின்றன. முழு விவரங்கள் இங்கே –
http://freetamilebooks.com/how-to-read-tamil-in-kindle-and-other-ebook-readers/

FreeTamilEbooks.com


நாங்கள் ஒரு குழுவாக இயங்கி, தமிழர்கள் பல்வேறு துறைகளிலும் எழுதும் வலைப்பதிவுகளைத் தொகுத்து, மின்னூல்களாக மாற்றி, FreeTamilEbooks.com தளத்தில், வெளியிட்டு வருகிறோம்.

DRM கைவிலங்குகள் ஏதும் இன்றி, epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவங்களில் எல்லாக் கருவிகளிலும் படிக்கும் வகையில் மின்னூல்களை வெளியிடுகிறோம்.


எந்தக் கருவி வாங்கலாம்?


மிகவும் சாதாரண E-Ink திரை கொண்ட கருவியே போதும். கிண்டில் ரூ 6000 வரை ஆகலாம். Kindle Paperwhite என்பது, E-Ink திரைதான். ஆனால் இரவில் ஒளிரும் திரை கொண்டது. கும்மிருட்டில் படிக்க விரும்புவோர் இதை வாங்கலாம். Kindle Fire என்பது சாதாரண ஆன்டிராய்டு டேப்லட்தான். இதற்குப் பதில், Apple ipad, Samsung, Nexus டேப்லட்களே மேல். ஆனால் கவனச் சிதறல், குறைந்த பேட்டரியுடனே வாழ வேண்டும்.

புது முயற்சிகள்


Newshunt எனும் நிறுவனம் மொபைல் செயலி உருவாக்கி, பல இந்திய மொழிகளில் குறைந்த விலையில் மின்னூல்களை விற்று வருகிறது. Pratilipi.com இப்போது இணையதளமாக மட்டும் செயல்படுகிறது. விரைவில் செயலியாகவும் வர இருக்கிறது.

இவை தவிர scribd.com, issuu.com போன்ற பல தளங்களும் மின்னூல்களை விற்பனை செய்கின்றன. இவை DRM உடன் வருவதாலும், ஆன்டிராய்டு, ஐஓஎஸ் -இல் மட்டுமே கிடைப்பதாலும், என் போன்ற E-Ink திரைக் காதலர்களுக்கு ஆர்வம் இருப்பதில்லை.

புதுக் கருவி வாங்கும் முன் ebay.co.in, olx.in போன்ற தளங்களிலும், சென்னை ரிச் தெரு போன்ற சந்தைகளிலும் தேடி, பழைய கருவிகள் கிடைத்தால், வாங்கலாம்.

நண்பரிடம் இரவல் வாங்கியாவது, ஒரு முறை E-Ink திரையில் ஒரு புத்தகம் படித்துப் பாருங்கள். உங்கள் கண்கள் உங்களுக்கு நன்றி சொல்வதை உணர்வீர்கள்.••••••••

மலைகள் இதழ் 78 ல் எழுதிய கட்டுரை.
http://malaigal.com/?p=7005

தெரிந்ததை எழுதுங்கள்

எழுத்து. மனித இனம் தான் பெற்ற அறிவை, பிறருக்கு தருவதற்காகக் கண்டுபிடித்த ஒரு மாபெரும் கண்டுபிடிப்பு. ஒலியானது வரி வடிவம் பெற்ற பின்புதான், தலைமுறைகளைத் தாண்டி வாழும் சிறப்பு பெற்றது. இயல்பாகவே மனிதருக்கு தாம் அறிந்தவற்றை பிறருக்கும் தரும் பரந்தமனம் உள்ளது. அதன் வெளிப்பாடுகளே இன்றும் நாம் படித்த புத்தகம், பார்த்த திரைப்படம், கேட்ட பாடல் போன்றவை பற்றி நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும் வழக்கம்.

பனை ஓலை காலங்களைத் தாண்டி, காகித வடிவம் பெற்றதுமே, உலகினில் பெரும் அறிவுப் புரட்சி ஏற்பட்டது. உலகின் எல்லா அரசியல் புரட்சிகளுக்குப் பின்னும் சிறந்த எழுத்தாளர்களும், புத்தகங்களுமே இருந்து வருகின்றன. தமிழிலும் எல்லா அறிவுகளும் புத்தகவடிவில் கிடைத்து வந்தன. போனதலைமுறை வரை.

சங்ககால இலக்கியங்கள், நீதி நூல்கள், புராணங்கள், சோதிட, வானியல் நூல்கள், சித்தமருத்துவம், விவசாயம், ஆன்மீகம், சிறுதொழில்கள் என பல்வேறு துறையினரும் தம் துறைசார் படைப்புகளை உருவாக்கி, நூல்களாக வெளியிட்டு வந்தனர். ரேடியோ ரிப்பேர் செய்வது முதல் நீச்சல், வீணை, காதல் வரை அனைத்தையும் சொல்லித்தரும் நூல்கள் பெருமளவில் வந்தன. எங்கோ உள்ள ரஷ்யாவில் எழுதப்பட்ட பல்வேறு உயர்தர அறிவியல் நூல்கள், மிர் பதிப்பகத்தால் தமிழாக்கம் செய்யப்பட்டு, எல்லா சிற்றூர்களின் கிளை நூலகங்களையும் சென்று அடைந்தன.

உலக அரசியல் முதல் உள்ளூர் கண்டுபிடிப்புகள் வரை அனைத்தையும் தமிழிலேயே பெறச் செய்தனர் போன தலைமுறையினர். ஆனால் இன்றைய இளைய இணைய தலைமுறைக்கு, இணையத்தில் கிடைப்பது என்ன?

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கல்லூரி மாணவரிடம் பேசிய போது, சில அதிர்ச்சியான உண்மைகளை அறிந்தேன்.
‘நான் ஏன் தமிழைக் கற்றுக் கொள்ளவேண்டும்? உலக அறிவு அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. என் அறிவுத் தேவைகளை தமிழ் தீர்ப்பதில்லை. நூலகங்களில் குவிந்து கிடக்கும் போன தலைமுறை நூல்கள் இணையவாசிகளான எங்களுக்கு கிடைப்பதும் இல்லை. வெளிநாடுகளில் வாழும் தமிழருக்கு அவை என்றும் கிடைக்கப் போவதே இல்லை.’

‘இணையத்தில் இல்லாத எந்த ஒரு விஷயமும் எங்களைப் பொறுத்தவரை இல்லவே இல்லை தான். எளிதில் பெற இயலாமல் எங்கோ ஏழு கடல், ஏழு மலை தாண்டி, நூலகங்களிலும், புத்தகக்கடைகளிலும் ஒளிந்து கிடைக்கும் அறிவைப் பெற இங்கு தேவை மிகவும் குறைவு. அறிவியல், இலக்கிய ஆய்வு செய்வோர் இவற்றை தேடி எடுத்து அவற்றை நுகர முடியும். இன்றைய நவீனத் தேவைகளுக்கு, தேடுபொறியில் தேடி கிடைப்பவை மட்டுமே மக்களால் பயன்படுத்தப் படுகின்றன.’

‘உண்மைதான். ஆனாலும் இப்போது தமிழில் நிறையபேர் எழுதுகிறார்களே.!’

‘ஆம். இணையத்தில் இப்போது எழுதுபவர்களைப் பாருங்கள். பெரும்பாலும் சினிமா. அரசியல். இவற்றிலும் இவர்கள் சாதிச் சண்டைகள், சினிமா கதாநாயகரைத் தொழும் அடிமைத்தனங்களே அதிகம். கொஞ்சம் இலக்கியம் வகையான கவிதைகள், சிறுகதைகள், தொடர்கள். அறிவு சார்ந்து எழுதுபவர்கள் 1 அல்லது 2 சதம் மட்டுமே. எங்கே தமிழில் ஒரு கணிணியை Assemble செய்வது பற்றியோ, ஒரு பைக் டயருக்கு பங்சர் ஒட்டுவது பற்றியோ, இணையவழியில் ஒரு சினிமா டிக்கட் பதிவு செய்வது பற்றியோ தேடிப் பாருங்களேன். ஒன்றுமே கிடைக்காது. கணிதம், அறிவியல் போன்றவற்றுக்கு பள்ளிப் பாடநூல்கள் தவிர, அவற்றை விளையாட்டாக சொல்லித் தரும் ஒரு தளமும் இல்லை. பல்லாயிரம் கைத்தொழில்களும் குலத்தொழில்களும் அழிந்து வரும் இந்த நிலையில் அவற்றைத் தமிழில் ஆவணப் படுத்த எவரும் இல்லை.’

‘டிரான்சிஸ்டர் காலத்தில், அவற்றை நாமே உருவாக்கவும், அடிப்படைகளைப் புரிந்து கொள்ளவும், பழுது பார்க்கவும், பல புத்தகங்கள் தமிழில் வந்திருக்கின்றன. இப்போது Raspberri Pi, Arduino காலத்தில் ஏன் அவை பற்றி தமிழில் இல்லை? அட ஒரு நல்ல ஸ்மார்ட் போன், மடிக்கணிணி, மின்சாரகுக்கர், வாஷிங் மெஷின், மிக்ஸி வாங்க, அவற்றின் நிறை குறைகளை அலசும் தளம் கூடஇல்லையே. இவை எளிய தேவைகள். பல்வேறு மென்பொருட்கள், கணிணி மொழிகள், நோய்கள், மருத்துவ ஆலோசனைகள், பொருளாதாரம், வணிகம், மார்க்கெட்டிங் என துறைசார்ந்த அறிவு எதுவும் தமிழில் பதியப் படுவதில்லையே.’

‘ஆம். பட்டு சேலைகள் நெய்வது எப்படி? என்று தேடினால் எதுவும் கிடைப்பதில்லை. “How to weave silk saree?” என்று தேடினால் பல வீடியோக்களும் இணையதளங்களும் கொட்டிக் கிடக்கின்றன. காலம் காலமாக பட்டு நெசவு செய்யும் எமது காஞ்சிபுரம் மக்கள் ஒருவர் கூட தமிழில் தம் தொழிலையும், திறமையையும், அறிவையும் பகிராதது வருத்தமே.’

‘இவ்வாறு அறிவு சார் விஷயங்கள் மிகக் குறைவாகக் கிடைக்கும் மொழி இன்னும் எத்தனை தலைமுறைகள் தாண்டும்? ‘ தக்கன தழைக்கும் ‘ என்ற டார்வின் விதி மொழிக்கும் பொருந்தும். தமிழில் அறிவைப் பெற இயலாதபோது, ஏன் அதைப் பயன்படுத்தவேண்டும்? கற்கவேண்டும்?’

‘என்னதான் இருந்தாலும் தமிழ் நம் தாய்மொழி அல்லவா? அதைக் கற்காமல் விடலாமா?’

‘ஹாஹாஹா. என் மம்மி, டாடிதான் தமிழர். ஆனால் என் தாய்மொழி ஆங்கிலம். என் மம்மி, டாடி வீட்டில் என்னிடம் ஆங்கிலம்தான் பேசினர். பள்ளியிலும் அதேதான். என் சொந்த ஆர்வத்தில்தான் ஓரளவு தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டேன். தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் தமிழில் அறிவூட்டும் இணையதளங்கள் இல்லாதபோது, தமிழைப் பயன்படுத்துவது பெரிதும் குறைகிறது. என்னளவில் பேச்சு மொழியாக மட்டும் இருந்து விட்டு, என் பிள்ளைகளிடம் போய்ச் சேருவது கடினமே.’

உண்மைதானே. கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தே, முன் தோன்றிய தமிழ், ஒவ்வொரு தலைமுறையினரும் செய்த பங்களிப்புகளால் மட்டுமே அடுத்த தலைமுறைக்குச் சென்றது. இதன் பல்வேறு இலக்கியச் செல்வங்கள் மட்டுமே இந்ததலைமுறைக்குப் போதுமானதல்ல. நூற்றாண்டுகள் பழமையான மொழி, நம் தலைமுறையினர் தம் அறிவைப் பகிராமல் போவதால், அழிந்து போனால், அது மிகவும் சோகமானது.

வாருங்கள். நமக்குத் தெரிந்த யாவற்றையும் தமிழில் எழுதுவோம். WordPress.com, blogger.com, medium.com என அட்டகாசமான வலைப்பதிவுகள் உள்ளன. தமிழில் எழுத உதவும் மென்பொருட்களும் நிறைய உள்ளன. உங்கள் மொபைலில் கூட தமிழில் வலைப்பதிவு எழுதலாம். விக்கிப்பீடியாவும் அறிவைப் பகிர ஒரு சிறந்த தளம்.

ஆங்கிலத்தில் கிடைக்கும் அறிவுச் செல்வங்கள் யாவும் துறைசார் வல்லுனர்களால் மட்டுமே எழுதப்படுவது அல்ல. தம் அறிவைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் சாமானியர்களால் மட்டுமே ஆ்ங்கிலத்தில் எல்லா அறிவுகளும் கிடைக்கின்றன. எனவே, தமது புலமை, திறமை பற்றி ஐயம் கொள்ளாமல், நமக்குத் தெரிந்தை, தெரிந்த வரையில் தமிழில் பகிரலாமே.

இலக்கியம், சினிமா, அரசியல் பற்றி எழுதுவோருக்கு இருக்கும் அதே ஆர்வமுடன் பிறதுறைகளிலும் எழுதத் தொடங்கினால் , தமிழ்த்தாயின் ஆயுள் கூடும்.
போன தலைமுறை தம் அறிவைப் பகிர புத்தகங்கள் உருவாக்க எவ்வளவு கஷ்டப் பட்டார்கள் என்பதை இந்த காணொளியில் பாருங்கள்.

http://www.dailymotion.com/video/x2tvgff_pretty-sure-you-can-t-do-this-to-a-kindle_lifestyle


நமக்கு அப்படியெல்லாம் இல்லை. சும்மா, தட்டச்சினாலே போதும்.
சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் தட்டச்சுப் பழக்கம்.

அட. தட்டச்சு கடினம் என நினைத்தால், எடுங்கள் உங்கள் மொபைல் போனை. உங்கள் துறை சார் விஷயங்களை வீடியோவாக பதிவு செய்து YouTube.com போன்ற தளங்களில் வெளியிடுங்கள். மென்பொருள் பாடங்கள், பைக் ரிப்பேர், புது மொபைல் போன் அறிமுகம், வேட்டி, சேலை நெய்தல், மர வேலை, வீடு கட்டுதல், தோட்டம் அமைத்தல், போன், மோட்டார் பழுது பார்த்தல், நடனம், உடற்பயிற்சி, விளையாட்டு என உங்களுக்குத் தெரியும் அனைத்தையும் தமிழில் பேசி, பதிவு செய்து வெளியிடுங்கள்.

இணையத்தில் இல்லாத எதுவும் இல்லை என்றே ஆகிவிடும்.

நம்மிடம் இருக்கும் வெள்ளித் தட்டில், போன வாரம் என்ன உணவு இருந்தது என்பது முக்கியம். அதைவிட இப்போது என்ன உணவு இருக்கிறது என்பதே நம் உயிரின் தேவை. மொழிக்கும் அதேதான்.

நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா நமக்குத் தந்ததை விட இன்னும் அதிகமாக நம் தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் தரலாம் வாருங்கள்.
பின்குறிப்பு -

கணிணி பற்றி தமிழில் அறிய – http://kaniyam.com
தமிழில் புகைப்படக்கலை – http://photography-in-tamil.blogspot.co.in
தமிழில் பங்கு வணிகம் – https://kaalaiyumkaradiyum.wordpress.com/

இது போல உங்களுக்குத் தெரிந்த துறைசார் தளங்கள் பற்றிய விவரங்களை பின்னூட்டமாகத் தரலாமே.

••

பின்குறிப்பு

முகநூல் வருகைக்குப் பின், வலைப்பதிவுகள் குறைந்து விட்டன. இது மிகப் பெரும் இழப்பு. வலைப்பதிவுகளில் எழுதுபவை மட்டுமே இணையத் தேடுபொறிகளில் கண்களில் கிடைப்பவை. முகநூலில் நீங்கள் எழுதுபவற்றை, உங்களாலேயே கூட தேடி எடுக்க இயலாது. தேடுபொறிகளிலும் கிடைக்காது. எனவே, முகநூலில் மட்டும் எழுதி, உங்கள் எழுத்துகளை ஒரு மாபெரும் பாழும் கிணற்றில் எறிந்து
விடாதீர். வலைப்பதிவாகவும் உங்கள் எழுத்துகளை சேமித்து வாருங்கள்.

••••••••••


மலைகள் இதழ் 77 ல் எழுதிய கட்டுரை.
http://malaigal.com/?p=6928

பொய்களைப் பரப்பாதீர்கள்


உண்மையை விட பொய்களே அதிகமாகவும் விரைவாகவும் மக்களிடையே பரவுகின்றன.

இணையம் இல்லாத காலங்களில், எனக்குப் பல தபால் அட்டைகள் வந்தன. ஒரு கோயிலில் நடந்த அதிசயத்தை விளக்கி, அதை 100 பேருக்கு அனுப்ப வேண்டும். அனுப்பவில்லையெனில் தீங்கு ஏற்படும் என்றும் பயமுறுத்துவர்.

பின்னர், மின்னஞ்சல் வந்த போது, பல வங்கிகளின் போலி வலைத் தளங்கள், கடவுச்சொல் கேட்டு மின்னஞ்சல்கள் வந்தன. ஆப்பிரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் தமது சொத்துகளுக்கு நம்மை வாரிசாக அறிவிக்க அனுமதி கேட்டு மின்னஞ்சல் அனுப்புவர். வெளிநாட்டு வேலை, போலி சுற்றுலா அழைப்புகள் என பல்வேறு பொய்கள் பரவின.

இப்போது முகநூலும், வாட்சப் போன்ற செயலிகளும் செய்திகளைப் பரப்புவதில் பெரும்பங்கு வகிக்கின்றன, பெருமழை போன்ற சிக்கலான நேரங்களில் மக்களை ஒருங்கிணைத்ததில் இவற்றின் சேவை மிகவும் போற்றத் தக்கது. அவசியமான தகவல்களைப் பகிர்ந்து பல உயிர்களைக் காத்துள்ளன.

பிற நேரங்களில், செய்திகளைப் பகிர்வதில் மக்களைக்கு உள்ள ஆர்வம், அவை உண்மையா, பொய்யா என ஆய்வதில் இருப்பதில்லை. எது கிடைத்தாலும் உடனே பகிர வேண்டும் என்று பலருக்கும் கை அரிக்கும் என நினைக்கிறேன். இது மிகவும் மோசமான ஒரு மனநிலை. பல செய்திகளைப் பார்க்கும் போது, மக்களுக்கு மண்டையில் மூளையும் யோசிக்கும் திறனும் இருக்கிறதா என்றே சந்தேகம் வந்து
விடுகிறது.

சில உதாரணங்களைக் காண்போம்.

1. வாகன ஆவணங்கள்

உங்களிடம் வாகன ஆவணங்கள் இல்லாமல், போக்குவரத்துக் காவலரிடம் மாட்டிக் கொண்டால், அவரிடம் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. 15 நாட்களில்
நீதிமன்றத்தில் ஆவணங்களைக் காட்டினால் போதும்.

இது பற்றி எனது காவல் துறை நண்பர்களிடம் விசாரித்தபோது, கிடைத்த தகவல்கள். இரு வாரங்களில் நீதிமன்றத்தில் ஆவணங்களைக் காட்டலாம். ஆனால் அதுவரை வண்டி காவல் நிலையத்தில் தான் இருக்கும். இந்தத் தகவல் யாருக்கும் தெரிவதில்லை. அரைகுறை செய்திகளை மட்டும் தெரிந்துகொண்டு, போக்குவரத்துக் காவலரிடம் உங்கள் சட்ட அறிவை நிரூபிக்க வேண்டாம். காவலர் வண்டியைக் கொண்டு சென்ற பின், அதன் சேதாரத்திற்கு யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள்.

சாலைவிதிகளைப் பின்பற்றுவதும் வண்டி ஆவணங்களை வைத்திருப்பதும் நமது கடமை. அதை மீறிவிட்டு, பின் கட்டணம் செலுத்தும்போது அதற்கான சட்டங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள். அரைகுறை செய்திகளைப் பரப்பாதீர்கள்.

2. ஒரு நோய்வாய்ப்பட்ட குழந்தையின் படம்

இதைப் பகிர்ந்தால் வாட்சப் நிறுவனம், குழந்தையின் பெற்றோருக்கு, ஒவ்வொரு பகிர்வுக்கும் 1 ரூபாய் அளிக்கும்.

வாட்சப்பில் 700 மில்லியன் பயனர்கள் ஒரு நாளில் 30 மில்லியன்  செய்திகளைப் பகிர்கின்றனர். ஒரு படத்தைப் பகிரும் செயலால், வாட்சப் நிறுவனம், எப்படி, ஏன் பணம் தர இயலும்? பெரும் தொண்டு நிறுவனங்களால் கூட இப்படி செய்ய இயலாதே. கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டார்களா?

3. அஜித் குமார் 100 MB data pack இலவசமாத் தருகிறார்

இதைவிட அவருக்கு வேறு வேலை இல்லை பாருங்கள். யாரோ கோமாளி ஒருவர் கிளப்பிய புரளியை, முட்டாள்கள் பலரும் பகிர்கின்றனர்.

4. திருநள்ளாறு சனி பகவான் கோயில் மகிமை

இந்தக் கோயிலின் மேலே செயற்கைக் கோள்கள் சில நிமிடங்கள் செயலிழந்து விடுகின்றனவாம். நாசாவே கண்டுபிடிக்க முடியாமல் திணறும் அற்புதமாம். நாசாவின் இணையதளத்தில் இது பற்றிய அறிவிப்பு ஏதுமில்லை. இவ்வாறு நாசாவுக்கே தெரியாத செய்திகளை அறிந்து மக்களிடையே பரப்பிய அதி புத்திசாலி யார் என்று தெரியவில்லை.

••••••••

இவை ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. இவை போல, பல நூறு பொய்கள் பரப்பப்பட்டு வருகின்றன. யாரோ ஒரு சில புத்திசாலிகள், சிரித்துக் கொண்டே உருவாக்கும் பொய்ச் செய்திகள், பல்லாயிரம் மக்களை முழு முட்டாள்கள் என நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன.

எது கிடைத்தாலும் உடனே பகிரும் மனநோய் மக்களுக்கு இருக்கும் வரை, இது தொடரும்.

நீங்களும் இதுவரை முட்டாளாக இருந்திருக்கலாம். இனியாவது எதையும் பகிரும் முன் சற்று யோசியுங்கள். செய்திகளின் உண்மைத் தன்மை பற்றி தேடத் தொடங்குங்கள். கைக்குள்ளேயே இணையம் வந்து விட்ட பின்பும், தேடுவதற்கும் உண்மையை ஆய்வதற்கும் சோம்பல் கொண்டு முட்டாளாகி விடாதீர்கள்.

நல்ல மூளையும், யோசிக்கும் திறனும் பெற்ற முழு மனிதராக மாற இன்றே முடிவு எடுங்கள்.

••••••••

மலைகள் இதழ் 88 ல் எழுதிய கட்டுரை.
http://malaigal.com/?p=7666