எனது சிறுவயதில், எல்லாத் திருவிழாக்களும் ஒரு மாதம் முன்பே தொடங்கிவிடும். எல்லாக் கடைகளிலும் வாழ்த்து அட்டைகள் தொங்கப்படும். தினமும் பள்ளி விட்டு வீடு வரும்போது, ஒவ்வொரு கடையாக மேய்வோம். எனது நண்பர்கள் பல்வேறு குழுக்களாக இருந்தோம். ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, சரத்குமார், சத்யராஜ், பிரசாந்த், குஷ்பு, கௌதமி, பானுப்பிரியா, சுகன்யா என பாரபட்சமின்றி அனைவருக்காகவும் தனிக்குழு வைத்திருத்தோம். இதில் எதிரிக் குழுக்களும் உண்டு. பத்திரிக்கை விளம்பரங்களில் வரும் படங்களைக் கத்தரித்து ரகசிய ஆல்பங்கள் செய்தோம். வாழ்த்து அட்டைகள் தரமான படங்களைத் தந்ததால், அவையே எமக்கு மிகவும் பிடித்தமானவை.
அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என அனைவரிடமும் சிறு வேலைகளுக்கும் காசு வாங்குவோம். கடைகளில் தரும் மிச்சத்தை அப்படியே அபேஸ் செய்வோம். எல்லாம் வாழ்த்து அட்டை வாங்கத்தான். பிடித்த நடிகைகள் படம் போட்ட அட்டைகள் அதிகம் கிடைக்காத வருத்தம் வேறு. ஸ்டாம்பு வாங்க, காசு கிடைக்காத காலங்களில், அஞ்சல் அட்டைகளே ஒரே வழி. அதில் கையால் வரைந்து, வாழ்த்துகள் எழுதி அனுப்பி விடுவோம்.
அட்டைகளை மாறி மாறி அனுப்பி மகிழ்வோம். தபால் காரர் தேவதூதனாய்த் தெரிவார். பேனா நட்பு வட்டமும் சேர்ந்து கொள்ள, வீட்டுப்பாடங்களை விட, கடிதம் எழுதும் வேலையில் தினமும் அதிக நேரம் கழியும். அனைவரின் முகவரியும் மனப்பாடமாய்த் தெரியும். நண்பர்களிடமிருந்து வாழ்த்து அட்டைகளும் பக்கம் பக்கமாய் கடிதங்களும் பெறும் மகிழ்ச்சி வேறு எதையும் விட அதிகமானது.
கல்லூரிக் காலத்தில் கணினி அறிமுகமானாலும், ஓரிரு ஆண்டுகள் கடிதங்கள் வழியே வெளியூர் நண்பர்களுக்கு அஞ்சலட்டையில் நுணுக்கி, நுணுக்கி எழுதி மகிழ்ந்தோம். தொலைபேசியின் வருகை கடிதங்களின் எண்ணிக்கையைக் குறைத்தது. இணையம் வந்தது, யாஹூ சாட் வந்தது. கடிதங்கள் வருவது நின்றே போனது. எல்லாத் திருவிழாக்களுக்கும் மின்னஞ்சல் மூலமே வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டோம்.
ஸ்மார்ட்போன் வந்து, மின்னஞ்சல் எழுதுவது நின்றது. பேசுவது கூட நின்றே போனது. வாட்சப் செய்தி மட்டுமே தொடர்பு கொள்ளும் வழி என்றானது. நமது எண் மட்டுமே தெரியும் காலமாகிப் போனது.
என் மகன் வியன். மூன்றரை வயது. கூடுமான வரை டிஜிட்டல் ஆதிக்கம் இல்லாமல் வளர்க்க முயல்கிறோம். வீட்டில் தொலைக்காட்சி இல்லை. என்னிடம் ஸ்மார்ட்போனும் இல்லை. நித்யா கண்டிப்புடன் அவனிடம் போன் தருவதில்லை. புத்தகங்கள், கதைகள், ஓவியங்கள், புதுப்புது குட்டி பொம்மைகள், புதுப்புது விளையாட்டுகள் என்றே வாழ்கிறோம். சுவரெங்கும் ஓவியங்கள், நோட்டுப் புத்தகங்கள் எங்கும் கிறுக்கல்கள். சில நேரங்களில் உடைகளில் கூட. என்ன, புதுக்கதைகள் சொல்ல, நம் மூளையை அதிகம் கசக்க வேண்டியிருக்கிறது.
இந்த தீபாவளியை வாழ்த்து அட்டைகளோடு கொண்டாட முடிவு செய்தோம். அஞ்சலகம் சென்று அஞ்சலட்டை வாங்கினோம். ஒரு அட்டை 50 பைசாதான். இந்தியா முழுதும் போகும். 30 ரூபாய்க்கு 60 அட்டைகள். ஒரு வாரத்தில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாழ்த்து அட்டைகள் வரைந்து தள்ளி விட்டான்.
60 பேரின் முகவரிக்கு எங்கே போவது? அப்போதுதான் உணர்ந்தோம். யாருடைய முகவரியும் எங்களிடம் இல்லை. நண்பர்களுக்கு முகவரி கேட்டு செய்தி அனுப்பினால், 'ஏன்? எதற்கு?' என்று கேள்விகள் மட்டுமே பதிலாய். ஒரு திடீர்ப் பரிசுக்கு நாம் யாருமே தயாரில்லை போல. சிலர் போன் செய்தே கேட்டனர். ஏதாவது சொல்லி, சமாளித்து முகவரி வாங்கினேன். தம்பி சுரேஷ் உறவினர் முகவரிகள் சேகரித்தான். ஒரு வழியாக எல்லோர் முகவரியும் பெற்று அட்டைகளை அனுப்பி வைத்தோம். சுபம்.
நண்பர்கள், உறவினர்களின் குழந்தைகள் பெயருக்கே முகவரி எழுதினோம். அவர்கள் பெறும் முதல் வாழ்த்து அட்டை இதுவாகத்தான் இருக்கும். வாழ்த்து அட்டைகளைப் பெற்றோர், போனில் அழைத்துப் பாராட்டினர்.
இனிய தருணங்களையும், அற்புதமான. நினைவுகளையும் உருவாக்குவதற்குத்தானே திருவிழாக்கள். வாழ்த்து அட்டைகள் எழுதுவோருக்கும், பெறுவோருக்கும் இனிமையைத் தருகின்றன. நீங்களும் அடுத்த திருவிழாவிற்கு வாழ்த்து அட்டைகள் உருவாக்கிப் பாருங்கள். டிஜிட்டல் உலகம் தர இயலாத, பெருமகிழ்ச்சியைப் பிறர்க்குத் தந்து, நீங்களும் அடைவீர்கள்.
பட மூலம் - http://theinspirationroom.com/daily/2007/australia-post-touch/
No comments:
Post a Comment