Wednesday, January 13, 2016

பொய்களைப் பரப்பாதீர்கள்


உண்மையை விட பொய்களே அதிகமாகவும் விரைவாகவும் மக்களிடையே பரவுகின்றன.

இணையம் இல்லாத காலங்களில், எனக்குப் பல தபால் அட்டைகள் வந்தன. ஒரு கோயிலில் நடந்த அதிசயத்தை விளக்கி, அதை 100 பேருக்கு அனுப்ப வேண்டும். அனுப்பவில்லையெனில் தீங்கு ஏற்படும் என்றும் பயமுறுத்துவர்.

பின்னர், மின்னஞ்சல் வந்த போது, பல வங்கிகளின் போலி வலைத் தளங்கள், கடவுச்சொல் கேட்டு மின்னஞ்சல்கள் வந்தன. ஆப்பிரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் தமது சொத்துகளுக்கு நம்மை வாரிசாக அறிவிக்க அனுமதி கேட்டு மின்னஞ்சல் அனுப்புவர். வெளிநாட்டு வேலை, போலி சுற்றுலா அழைப்புகள் என பல்வேறு பொய்கள் பரவின.

இப்போது முகநூலும், வாட்சப் போன்ற செயலிகளும் செய்திகளைப் பரப்புவதில் பெரும்பங்கு வகிக்கின்றன, பெருமழை போன்ற சிக்கலான நேரங்களில் மக்களை ஒருங்கிணைத்ததில் இவற்றின் சேவை மிகவும் போற்றத் தக்கது. அவசியமான தகவல்களைப் பகிர்ந்து பல உயிர்களைக் காத்துள்ளன.

பிற நேரங்களில், செய்திகளைப் பகிர்வதில் மக்களைக்கு உள்ள ஆர்வம், அவை உண்மையா, பொய்யா என ஆய்வதில் இருப்பதில்லை. எது கிடைத்தாலும் உடனே பகிர வேண்டும் என்று பலருக்கும் கை அரிக்கும் என நினைக்கிறேன். இது மிகவும் மோசமான ஒரு மனநிலை. பல செய்திகளைப் பார்க்கும் போது, மக்களுக்கு மண்டையில் மூளையும் யோசிக்கும் திறனும் இருக்கிறதா என்றே சந்தேகம் வந்து
விடுகிறது.

சில உதாரணங்களைக் காண்போம்.

1. வாகன ஆவணங்கள்

உங்களிடம் வாகன ஆவணங்கள் இல்லாமல், போக்குவரத்துக் காவலரிடம் மாட்டிக் கொண்டால், அவரிடம் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. 15 நாட்களில்
நீதிமன்றத்தில் ஆவணங்களைக் காட்டினால் போதும்.

இது பற்றி எனது காவல் துறை நண்பர்களிடம் விசாரித்தபோது, கிடைத்த தகவல்கள். இரு வாரங்களில் நீதிமன்றத்தில் ஆவணங்களைக் காட்டலாம். ஆனால் அதுவரை வண்டி காவல் நிலையத்தில் தான் இருக்கும். இந்தத் தகவல் யாருக்கும் தெரிவதில்லை. அரைகுறை செய்திகளை மட்டும் தெரிந்துகொண்டு, போக்குவரத்துக் காவலரிடம் உங்கள் சட்ட அறிவை நிரூபிக்க வேண்டாம். காவலர் வண்டியைக் கொண்டு சென்ற பின், அதன் சேதாரத்திற்கு யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள்.

சாலைவிதிகளைப் பின்பற்றுவதும் வண்டி ஆவணங்களை வைத்திருப்பதும் நமது கடமை. அதை மீறிவிட்டு, பின் கட்டணம் செலுத்தும்போது அதற்கான சட்டங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள். அரைகுறை செய்திகளைப் பரப்பாதீர்கள்.

2. ஒரு நோய்வாய்ப்பட்ட குழந்தையின் படம்

இதைப் பகிர்ந்தால் வாட்சப் நிறுவனம், குழந்தையின் பெற்றோருக்கு, ஒவ்வொரு பகிர்வுக்கும் 1 ரூபாய் அளிக்கும்.

வாட்சப்பில் 700 மில்லியன் பயனர்கள் ஒரு நாளில் 30 மில்லியன்  செய்திகளைப் பகிர்கின்றனர். ஒரு படத்தைப் பகிரும் செயலால், வாட்சப் நிறுவனம், எப்படி, ஏன் பணம் தர இயலும்? பெரும் தொண்டு நிறுவனங்களால் கூட இப்படி செய்ய இயலாதே. கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டார்களா?

3. அஜித் குமார் 100 MB data pack இலவசமாத் தருகிறார்

இதைவிட அவருக்கு வேறு வேலை இல்லை பாருங்கள். யாரோ கோமாளி ஒருவர் கிளப்பிய புரளியை, முட்டாள்கள் பலரும் பகிர்கின்றனர்.

4. திருநள்ளாறு சனி பகவான் கோயில் மகிமை

இந்தக் கோயிலின் மேலே செயற்கைக் கோள்கள் சில நிமிடங்கள் செயலிழந்து விடுகின்றனவாம். நாசாவே கண்டுபிடிக்க முடியாமல் திணறும் அற்புதமாம். நாசாவின் இணையதளத்தில் இது பற்றிய அறிவிப்பு ஏதுமில்லை. இவ்வாறு நாசாவுக்கே தெரியாத செய்திகளை அறிந்து மக்களிடையே பரப்பிய அதி புத்திசாலி யார் என்று தெரியவில்லை.

••••••••

இவை ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. இவை போல, பல நூறு பொய்கள் பரப்பப்பட்டு வருகின்றன. யாரோ ஒரு சில புத்திசாலிகள், சிரித்துக் கொண்டே உருவாக்கும் பொய்ச் செய்திகள், பல்லாயிரம் மக்களை முழு முட்டாள்கள் என நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன.

எது கிடைத்தாலும் உடனே பகிரும் மனநோய் மக்களுக்கு இருக்கும் வரை, இது தொடரும்.

நீங்களும் இதுவரை முட்டாளாக இருந்திருக்கலாம். இனியாவது எதையும் பகிரும் முன் சற்று யோசியுங்கள். செய்திகளின் உண்மைத் தன்மை பற்றி தேடத் தொடங்குங்கள். கைக்குள்ளேயே இணையம் வந்து விட்ட பின்பும், தேடுவதற்கும் உண்மையை ஆய்வதற்கும் சோம்பல் கொண்டு முட்டாளாகி விடாதீர்கள்.

நல்ல மூளையும், யோசிக்கும் திறனும் பெற்ற முழு மனிதராக மாற இன்றே முடிவு எடுங்கள்.

••••••••

மலைகள் இதழ் 88 ல் எழுதிய கட்டுரை.
http://malaigal.com/?p=7666
Post a Comment