இந்த ஆண்டும் பொங்கல் விழாவிற்கு வாழ்த்து அட்டைகளை வரைந்து அனைவருக்கும் அனுப்ப முடிவு செய்தோம்.
இம்முறை அஞ்சல் அட்டைகள் 25 பைசாவிற்கே கிடைத்தது. நம்ப முடியவில்லை அல்லவா? சாதாரண அட்டை 50 பைசா. பாதி பக்கம் விளம்பரத்துடன் உள்ள அட்டை 25 பைசா.
30 ரூபாய்க்கு 120 அட்டைகள் வாங்கினேன். குழந்தைகள் ஒரு பக்கம் மட்டும் வரைந்தால் போதும்.
வீட்டில் சிறார்கள் எண்ணிக்கை அதிகம். அவர்கள் வரைந்து தள்ளி, வீணாக்கியது போக, அவர்களுக்குள்ளேயே பரிமாறியது போக, அவர்களே தபால்காரராக மாறி, வீடுகளுக்கு தந்தது போக, நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்ப ஓரளவு தேறின.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 வாழ்த்து அட்டைகள் உருவாக்கி அனுப்புவோம். அவர்கள் எளிதில் வரைத்து விடுகின்றனர். 50 முகவரிகள் எழுதுவதற்குத்தான் எனக்கு நாக்கு தள்ளிவிடும். பள்ளிக்காலங்களில் பல நூறு பக்கங்கள் எளிதில் எழுதித்தள்ளிய எனக்கு, சில முகவரிகள் எழுதவே கை வலிப்பது காலக்கொடுமை. இம்முறை அனைவரது முகவரியையும் glabels என்ற கட்டற்ற மென்பொருள் மூலம் தாளில் அச்சிட்டு, வெட்டி, அட்டைகளில் எளிதில் ஒட்டினேன்.
glabels.org இந்த முகவரியில் இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்யலாம். முகவரிகளை ஒரு Spreadsheet ல் எழுதி Tab Separated Value (TSV) கோப்பாக சேமிக்க வேண்டும். பின் அதை glabels ல் இறக்கி, லேபிள் வடிவமைத்து, பின் PDF ஆக மாற்றினேன். அருகில் உள்ள இணையக்கடையில் அச்சிட, அங்கேயே அளவாக வெட்டியும் தந்தார்கள்.
ஓரளவு நன்றாக உள்ள வாழ்த்து அட்டைகளை வியன், இயல், எரிக், கலை தேர்ந்தெடுத்தனர். அவற்றில் முகவரிகளை ஒட்டினர். பின் அவற்றை தபால் பெட்டியில் போடும் வைபவம். நான், நித்யா, வியன், இயல், பாரி, தோஷிதா, சாய் கிருபா ஆகியோர் ஊர்வலமாக அஞ்சலகம் போனோம். ஒவ்வொருவராக அஞ்சல் அட்டைகளை தபால் பெட்டியில் போட, ஒருவர் பெட்டியின் பூட்டை ஆட்டி, திறக்க முயன்றார். சத்தம் கேட்டு அஞ்சல் அலுவலர் வந்து, எங்களைக் கண்டு சிரித்து விட்டுப் போனார்.
பின் அருகில் உள்ள சிறு பண்ணை வீட்டில் வளர்ந்து வரும் சேவல், கோழிகளை வேடிக்கை பார்த்தோம். வியன் அருகில் உள்ள மரம் மீது ஏறக்கற்றான்.
பின், வீடுகளில் இருந்து எட்டிப் பார்த்தோர், வண்டியில் பழம் விற்கும் அக்கா ஆகியோரிடம் வம்பளந்தபடியே வீடு வந்து சேர்ந்தோம்.
நான்காவது ஆண்டாக வாழ்த்து அட்டைகள் அனுப்பும் நிகழ்வைத் தொடர முடிவதில் பெருமகிழ்ச்சி. ஒரு 25 பைசா அட்டை இந்தியா முழுதும் சென்றடைய முடிவது, மாபெரும் சாதனையே.
அஞ்சலம், வங்கி போலாகி, பல்வேறு பணிகள் செய்து, தன் இருப்பை நிலைநாட்ட பெருமுயற்சி எடுத்து வருகிறது. அதனூடே, வாழ்த்து அட்டைகள் பரிமாறும் பழக்கத்தை மேம்படுத்த, அஞ்சல் துறை ஒரு முயற்சி எடுக்கலாம். குறைந்த விலையில் ஓவியங்கள், குழந்தைகள் விரும்பும் கார்ட்டூன்கள் விற்கலாம். அஞ்சல் அட்டைகளில் ஓவியம் வரையும் போட்டிகள் நடத்தலாம்.
எல்லா மாற்றங்களும், நம் வீடுகளில் இருந்தே தொடங்க வேண்டும். நீங்களும் யாருக்கேனும் வாழ்த்து அட்டை அனுப்புங்கள். முடிந்தால் ஒரு கடிதம் எழுதிப் பாருங்கள். கிறுக்குத் தனமாகத் தோன்றினாலும், எல்லா நேரத்திலும் அதி புத்திசாலியாக இருந்து என்ன ஆகிவிடப்போகிறது? செய்யும் ஓராயிரம் வெட்டி வேலைகளில் கடிதம் எழுதுவதும் இருந்து விட்டுப் போகட்டுமே.
சமீபத்தில் நண்பர் அன்பரசு எனக்கு எழுதும் அஞ்சல் அட்டைக் கடிதங்கள் பெருமகிழ்ச்சி தருகின்றன. எழுத்தைப்போல் அன்பை உணர்த்துவது வேறு எதுவும் இல்லை என்பதை கடிதங்கள் உணர்த்துகின்றன.
பட மூலம் - http://theinspirationroom.com/daily/2007/australia-post-touch/
வியன் எழுதக் கற்றுக் கொண்டான். கடிதம் எழுதும் வழக்கம் ஏற்படுத்தித் தர வேண்டும்.
கடந்த வருட வாழ்த்து அட்டைப்பதிவுகளை இங்கே படிக்கலாம்.
https://tshrinivasan.blogspot.com/2020/01/pongal-greeting-cards-2020.html
https://tshrinivasan.blogspot.com/2017/10/greeting-cards-and-celebrations.html
அடுத்த ஆண்டு உங்களுக்கும் வாழ்த்து அட்டை வேண்டுமெனில் உங்கள் முகவரியை எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். (tshrinivasan@gmail.com) நீங்களும் யாருக்கேனும் வாழ்த்து அட்டை அனுப்புங்கள்.
6 comments:
நிச்சயம் அண்ணா முகவரியை அனுப்புவேன் என் 2.5 வயது மகன் புகழ் விஜய்யை தபால் பழக்கதுக்கு கொண்டு வருவேன்
சுட்டிங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா
அருமையான வாழ்த்து அட்டைகள். சுட்டி குழந்தைகளுக்கு என் வாழ்த்துக்கள்.
you are an inspiration srini.. and your family is a 'model' family!keep inspiring
அருமை... வாழ்த்துகள்...
நல்ல முயற்சி. தொடருங்கள் சீனிவாசன் சார்!
Post a Comment