Monday, October 19, 2026

இயல் விருது 2025 விழா - நினைவுகள்

 
நேற்று கனடா, டொரண்டோ நகரில் தமிழ் இலக்கியத் தோட்டம் நடத்திய 'இயல் விருது 2025' விழாவில் கலந்து கொண்டேன்.

இயல் விருது, உலகின் மறு கோடியில் இருந்து, தமிழ் சிறந்த எழுத்தாளர்களைத் தேடி, அவர்களின் படைப்புகளை உச்சி நுகர்ந்து, தமிழின் எழுத்துலகுக்கு எடுத்துரைக்கும் ஒரு மாபெரும் பணி.

ஒரு பெரிய அறை முழுதும் சான்றோர்கள். எழுத்தாளர்கள். பேராசிரியர்கள். அதில் பலர் நண்பர்கள். என மிக இனிதான நிகழ்வாக இருந்தது. ஒவ்வொரு விருதாளருக்கும் அறிமுகம், பரிசளிப்பு, ஏற்புரை என சரியான திட்டமிடலுடன் நடந்த நிகழ்வு. இனிதான இரவு உணவு. மகிழ்ச்சியான உரையாடல்கள். யாவர் முகத்திலும் புன்னகை. 
    

2025 க்கான விருது பெற்றோர்

- வாழ்நாள் சாதனைக்கான ‘அ. முத்துலிங்கம் இயல் விருது’ – டிராட்ஸ்கி மருது.
- புனைவு – பா. திருச்செந்தாழை, (நெருப்பில் வளர்பவை, நூல்வனம்)
- அபுனைவு – 1. தூக்கு செல்வம் (ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம், கிழக்கு பதிப்பகம்), 2. சங்கர சரவணன் (வைகறை வாசகன் பதிவுகள், விகடன் பப்ளிகேஷன்ஸ்)
- கவிதை – கருணாகரன் சிவராசா, (காணாமலாக்கப்பட்டோருக்காக இரண்டு செயலிகள், வையம்)
- மொழிபெயர்ப்பு – கீதா சுகுமாரன் (A Smile Drying On a Vine, Red River; மூலம்: கொடியில் கிடந்து உலரும் புன்னகை, பா. அகிலன்)

இந்த ஆண்டு கூடுதலாக, மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி சேர்க்கப் பட்டது. 'வாசிப்பின் மூலம் எனது பண்பாட்டு அடையாத்தைக் கண்டறிதல்' என்ற தலைப்பில் எழுதி பரிசு பெற்றோர்.

முதல் பரிசு - ரிஷி ஶ்ரீகந்தன்,  இரண்டாம் பரிசு - 1 திருவாதிரை நிதுசா, இரண்டாம் பரிசு 2 ஆதர்ஷ் நாராயணன்

விருது பெற்றோருக்கு வாழ்த்துகள். அளித்தோருக்கு நன்றிகள்.

2016 இக்கான தமிழ் இலக்கியத் தோட்டத்தின் “தமிழ் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது" எனக்கு கிடைத்த போது, நேரில் வர வாய்ப்பு கிடைக்க வில்லை.  அந்தப் பரிசுத் தொகை கொண்டுதான் 'கணியம் அறக்கட்டளை' தொடங்கினோம். உலகெங்கும் உள்ள நண்பர்கள் பங்களிப்புகளுடன் வளர்ந்து வருகிறோம். தமிழுக்கான புது முயற்சிகளை தொடர்ந்து செய்து வர, ஊக்கமளிக்கும் சான்றோர்கள் சூழ வாழ்வது பெரும் வரம்.

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

என்ற குறளுக்கு வாழும் விளக்கமாக அமைந்தது 'இயல் விருது 2025' நிகழ்வு.


இனிய நிகழ்வின் மகிழ்வான தருணங்களை இங்கே பகிர்ந்துள்ளேன்.
https://photos.app.goo.gl/Je52RRJ9GqtqKZXN9


ஆஸ்தான புகைப்படங்கள், காணொளிகளை நிகழ்ச்சிக் குழுவினர் விரைவில் வெளியிடுவர்.