Tuesday, September 13, 2016

உலகத் தமிழ் இணைய மாநாடு 2016 - சில நினைவுகள்


செப் 9,10,11 2016 ல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், திண்டுக்கல்லில் நடைபெற்ற உலகத் தமிழ் இணைய மாநாடு 2016 ல் கலந்து கொண்டேன். இம்முறை நித்யா, வியன், நான் என மூவரும் சென்றோம்.நித்யாவும் நானும் இணைந்து பைதான் நிரலாக்க மொழி பற்றி பயிற்சி தந்தோம். நித்யா பயிற்சி தரும் முறை எளிமையாக இருந்தது. மாணவர்கள் ஆர்வமுடன் கற்றனர். அது பணம் செலுத்தி கற்க வேண்டிய பயிற்சி. ஆயினும் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்தது மிக ஆச்சரியம். எல்லோரும் தனித்தனி கணினிகளில் பயில வேண்டி, பல மாணவர்களை மறுத்து விட்டோம். திண்டுக்கல் போன்ற ஊர்களிலும் பைதான் கற்கும் தாகம் உள்ளது மகிழ்ச்சி. இங்கு இன்னும் பல பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்.

முதல் நாள் நிகழ்வில் ஓபன் தமிழ் Open-Tamil பைதான் நிரல் பற்றி பேசினேன். இதன் ஆக்குனர்  பாஸ்டன் முத்து. என் தம்பி அருளாளன் இதற்கு ஒரு எழுத்துரு மாற்றி எழுதியுள்ளார். நானும் சொற்பிழைத் திருத்தியில் பங்களிக்க முயன்று வருகிறேன். இதன் மூலம் வார்த்தை விளையாட்டுகளை உருவாக்கலாம். பலரும் இந்த விளையாட்டுகளை அறிந்து பாராட்டினர்.

பின் நுட்பங்கள் சார்ந்த அரங்குகளில் கலந்து கொண்டேன். எழுத்துணரி, சொற்பிழைத்திருத்தி, உரை ஒலி மாற்றி, எந்திர மொழிபெயர்ப்பு என பல நுட்பங்களில் உரைகள். Hidden Markov Model மூலம் உரை ஒலி மாற்றி செய்யலாம். இது பற்றி மேலும் ஆராய்ந்து ஓபன் தமிழில் சேர்க்க வேண்டும்.

முந்தைய மாநாட்டு உரைகள் போலவே, இதிலும் பலர் தாம் உருவாக்கிய மென்பொருட்கள் பற்றிய அறிமுகம் மட்டுமே தந்தனர். உள்ளார்ந்த நுட்பங்கள், சிக்கல்களைத் தீர்த்த விதங்கள் பற்றி அதிகம் பேசவில்லை. அவை எதுவும் கட்டற்ற மென்பொருள் இல்லை. எனவே அவற்றை நாம் பயன்படுத்தவோ, இணைந்து வளர்க்கவோ, பங்களிக்கவோ இயலாது. இது போன்ற மாநாடுகளில் மட்டுமே அவற்றைக் காணலாம். தமிழுக்குத் தேவையான அனைத்து மென்பொருட்களும் சிறப்பாக உருவாக்கப்பட்டு, மக்கள் பங்களிப்புக்கு வழங்கப்படாமல், அரசு மற்றும் பல்கலைக்கழக கிடங்குகளில் உறங்கிப் போவது வேதனையிலும் வேதனை. இதே நிலை தொடர்ந்தால், 100 ஆவது தமிழ் இணைய மாநாட்டிலும் இதே தலைப்புகளில்தான் ஆய்வுக் கட்டுரைகள் இருக்கும். அரசு உதவி பெற்று, மக்கள் வரிப்பணத்தில் உருவாகும் ஆய்வுகள், மென்பொருட்கள் அனைத்தும் கட்டற்ற மென்பொருட்களாக வெளிவர யாரைக் கேட்பது?  உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

மூன்றாம் நாளில், எந்திர மொழியாக்கம், உரை ஒலி மாற்றி பற்றிய நீண்ட பேருரைகள். எந்திர மொழியாக்கம் ஆய்வு நிலையில் உள்ளது. ஆனால் SSN கல்லூரிப் பேராசிரியர் திரு. நாகராஜன் உருவாக்கிய உரை ஒலி மாற்றி, தமிழை மிக இனிமையாகவே பேசுகிறது. பன்னெடுங்காலக் கனவு நனவாகியுள்ளது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. நனவு மீண்டும் கனவாகிப் போனது. ஆம். அந்த மென்பொருளும் மக்கள் பயனுக்கும் பங்களிப்புக்கும் இல்லையாம். அவர்கள் ஆய்வகத்தில் மட்டுமே இருக்குமாம். அதை கட்டற்ற மென்பொருளாக வெளியிட வேண்டினேன்.

காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் உத்தம அமைப்பிற்காக ஒரு இருக்கை அமைவது மகிழ்ச்சியான செய்தி. இதன் மூலம் தொடர் பயிற்சிகள், ஆய்வுகள் நடத்தலாம்.


ஆராய்ச்சிக் கட்டுரைகளை விட, மாணவர்களுக்கான பயிற்சியும், அரை நாள் அளவிலான நுட்ப பேருரைகள் மிக்க பயனளித்தன. இனி வரும் மாநாடுகளில் இவற்றை அதிகம் சேர்க்க வேண்டும்.

உதயன், பத்ரி சேஷாத்ரி, துரை மணிகண்டன், செல்வமுரளி, இளந்தமிழ், முகிலன், தனேஷ் போன்ற நண்பர்களை சந்தித்தேன். அவர்களுடனான உரையாடல்கள் புது யோசனைகளையும், தமிழ்க்கணிமைக்குத் தொடர்ந்து பங்களிக்கும் உற்சாகத்தையும் தருகின்றன.

500 பக்க மாநாட்டு இதழைப் படிக்கத் தொடங்கியுள்ளேன். HTMl, Epub, mobi, A4 PDf, 6 Inch PDF  ஆகிய வடிவங்களில் வெளியிடக் கோரியுள்ளேன்.

மாநாட்டை சிறப்புற நடத்திய உத்தமம் அமைப்புக்கு நன்றி. மாநாட்டு ஏற்பாட்டு செயல்களில் என்னையும் சேர்த்த செல்வமுரளிக்கு நன்றி. பல்வேறு இனிய அனுவங்கள், கற்றல்கள் நடந்தன.

நான் பணியாற்றும் நிறுவன http://TVFPlay.com நண்பர்கள் பல சிக்கலான நேரங்களிலும் எனக்காக பணியாற்றி மாநாட்டுக்கான நாட்களை எனக்குத் தந்தனர். அவர்களுக்கும் நன்றி.

எப்போதும் என் எல்லா செயல்களிலும் துணையிருக்கும் நித்யா, வியன் இருவருக்கும் என்றும் என் அன்பு உரித்தாகுக.

 
Post a Comment