Thursday, October 08, 2015

கனவுகளைத் துரத்துபவன் - த.சுரேஷ் B.E, B.L

"அண்ணா,  ஒரு வழியா +2 முடித்துவிட்டேன்."
"மகிழ்ச்சி தம்பி, அடுத்து என்ன செய்யப் போகிறாய்?"

"சட்டக் கல்லூரி செல்ல ஆசை."
"அடடா. அது வேணாமே. நீ BE படிக்கலாமே."

"எனக்குப் பிடித்ததைத் தானே படிக்க முடியும்? "
"ஆனால், சட்டப்படிப்பு வேண்டாமே. "

"வேறு என்ன படிப்பது?"
"நீ BE படித்தால், வீட்டில் அனைவரும் மகிழ்வோம்."

"உங்கள் மகிழ்ச்சிக்காக வேண்டுமானால் BE படிக்கிறேன். ஆனால் அதில் எனக்கு விருப்பமில்லை."

சில ஆண்டுகளுக்கு முன், எனக்கும் என் தம்பி சுரேஷுக்கும் நடந்த உரையாடல் இது. அவன்  BE சேர்ந்ததில் எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. அவனைத் தவிர.

காலப்போக்கில் சரியாகி விடும் என்று நினைத்தோம். அவனுக்கு படிப்பதில் பெரிதாக ஆர்வம் இல்லை. தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் வாங்கினாலும் தேர்ச்சி பெற்று விடுவான். ரொம்ப ஆர்வமுடன் படித்தாலும் மதிப்பெண்களும் அறிவும் வேறுதானே. அதனால் அதைப்பற்றி நாங்கள் கவலைப் படவில்லை.

அவன் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. எதிலுமே ஆர்வம் காட்டாமல் ஒரு வெறுமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தான்.

"எதையாவது பிடித்து செய்டா தம்பி. விளையாடு, சினிமா பார், ஊர் சுற்று. படிப்பில்தான் ஆர்வமில்லை. வேறு எதிலாவது ஆர்வம் காட்டலாமே. உனக்கு எதுதான் பிடிக்கும்?"

"எனக்கு எதுவுமே பிடிக்கவில்லை. என்னை வற்புறுத்தாதே அண்ணா."


BE யும் முடிந்தது. அவனால் நேர்முகத் தேர்வுகளில் கேட்கப்பட்ட அவன் துறை சார்ந்த நுட்பமான கேள்விகளுக்குக் கூட பதில் சொல்ல இயலவில்லை. அவன் எதிர் காலம் என்ன ஆகுமோ என்று பயந்தேன்.

ஒருவழியாக துறை சார்ந்த நிறுவனத்தில் சேர்ந்தான். ஒரே மாதத்தில் பிடிக்கவில்லை என்று நின்றுவிட்டான்.

'அப்பாடா. ஏதோ ஒன்று பிடிக்கவில்லை என்று சொல்லுமளவுக்காவது இருக்கிறானே! ' என்று மகிழ்ந்தேன்.

அவனுக்கு லினக்ஸ் ஓரளவு தெரியும். கணியம் இதழில் கட்டுரைகள் எழுதியிருக்கிறான். தனியாக வலைத்தளத்திலும் எழுதி வந்தான். ஒரு கணிணி  நிறுவத்தில் சேர்ந்தான். அங்கும் இரு வாரங்கள் தான்.

அவனுக்கு நிரலாக்கம் (Programming) சொல்லித்தர முயன்ற என் நண்பர்கள் தோல்வி அடைந்து வருந்தினர்.

திடீரென ஒருநாள், "நான் சட்டக்கல்வி படிக்கப் போகிறேன்" என்றான்.

"என்ன இது புதுக் குழப்பம்? ஏற்கெனவே நீ BE. பிறகு ஏன் BL? "

"BE உங்களுக்காகப் படித்தேன். அப்போதே BL சேர அனுமதி கேட்டேன். யாரும் அனுமதிக்கவில்லை. இப்போதாவது அனுமதி தாருங்களேன். நீ மட்டும் உனக்குப் பிடித்த லினக்ஸ் வழியில்தான் வாழ்வேன் என உறுதியோடு இருக்கிறாயே. அருளும் அவனுக்குப் பிடித்தவாறு IIT யில் படிக்கிறான்.  எனக்குப் பிடித்த துறையில் நானும் சாதிக்க விரும்புகிறேன்.  சட்டக்கல்வி எனக்கு சிறு வயதிலிருந்து இருக்கும் கனவு. கனவை மெய்யாக்குவதை விட சிறந்த வாழ்க்கை உண்டா என்ன?"

பெரும் தவறு செய்து விட்டதை உணர்ந்து வருந்தினேன்.

"மன்னித்து விடடா தம்பி. நீ உனது விருப்பப்படியே செய். உனக்குப் பிடித்த வாழ்க்கையை மட்டுமே வாழு. உன் கனவுகளைத் துரத்தி, அவற்றை நனவாக்கு. இத்தனை காலம் எங்களுக்காக பொறுத்திருந்தது போதும். தனக்கு எது பிடித்திருக்கிறது என்று கண்டுபிடிப்பது தான் ஒவ்வொருவருக்கும் உள்ள பெரிய சவால். அதைக் கண்டுபிடித்தால் போதும். அதை நோக்கிய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே வாழ்வின் பயன். உன் கனவுகள் யாவும் நனவாகட்டும். பல்லாயிரம் வாழ்த்துக்கள்."


வீட்டில் அனைவரின் பெரும் மகிழ்ச்சியுடனும் ஆதரவுடனும் BL சேர்ந்தான்.

அவன் கண்களில் பெரு மகிழ்ச்சியை பல ஆண்டுகளுக்குப் பிறகு கண்டேன். இது அவனுக்கு மறுபிறப்பு போல. மகிழ்ச்சியான கல்லூரி நாட்களை கொண்டாடத் தொடங்கினான்.
இங்கும் அவன் வகுப்பில் முதல் மாணவன் அல்ல. ஆனால், மகிழ்ச்சியான இளைஞன். நண்பர்கள், விளையாட்டு, இசை, சினிமா, பயணங்கள், புத்தக வாசிப்பு என ஒவ்வொரு நாளையும் அவன் கொண்டாடுவது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இனிமேல் என் கருத்துகளை யாருக்கும் திணிக்க மாட்டேன் என்று உறுதி கொண்டேன்.

சட்டக் கல்வியும் முடிந்தது.

த.சுரேஷ் B.E, B.Lhttps://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpl1/t31.0-8/s960x960/11230240_10207256244461033_5974127519944362604_o.jpg

இதோ இன்னும் சில மணி நேரங்களில் சென்னை Bar council ல் வழக்கறிஞராகப் பதிவு செய்யப் போகிறான். 

டெல்லியில் இருந்து இதைக் கொண்டாட இன்னொரு தம்பி அருளாளன் வந்துள்ளான். அப்பா, அம்மா, அருள், சுரேஷ், நண்பர்கள் சங்கர், மோகன், சத்யராஜ், மேலும் பல உறவுகள், நட்புகளோடு சென்னை சென்று இந்த பதிவு நிகழ்வை கொண்டாடப் போகின்றனர்.
வெகு தூரத்தில், இங்கிலாந்தில் நான் இருந்தாலும் மனமெல்லாம் உன்னை வாழ்த்திக் கொண்டே இருக்கிறது சுரேஷ்.

கனவுகள் நிறைவேறுவதை விட பெருமகிழ்ச்சி ஏதுமிருக்காது. இந்தக் கனவுகளை நனவாக்கும் விளையாட்டை உன்னிடமிருந்தே கற்றேன். எனக்கான கனவுகளையும் நனவாக்கிக் கொண்டிருக்கிறேன்.

இன்னும் பெரிதாகக் கனவுகள் காண். அவற்றைத் துரத்தித் துரத்தி நனவாக்கு.

   
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.

இந்த இரு குறள்களுக்கும் உதாரணமாய் வாழும் உன் செயல்கள் யாவும் மனித குலம் முழுமைக்கும் உதவுதாக இருக்கட்டும். [   இது என் ஆசை. மற்றபடி உனக்குப் பிடித்ததையே செய்வாயாக. ;-)  ]

வாழ்த்துக்கள்.
Post a Comment