பா.ராகவன் எழுதிய துறவு உலகம் இந்த 1000+ பக்க நூல்.
கனடாவில் உள்ள நூலகத்தில் இந்த நூல் கிடைத்தது பெரு மகிழ்ச்சி. ஆனால் ஆயிரம் பக்க நூலைப் படிப்பது எனக்கு சாத்தியமா என்ற ஐயம் எழாமல் இல்லை. ஏற்கெனவே கிண்டிலில் இந்த நூலை வாங்கியிருந்தாலும், பெரிய நூல்களைப் படிப்பதில் பெரும் சுணக்கம் தற்போது. சிறுகதைகள், குறுங்கதைகள் என சுருங்கி, ஒரு நிமிட குறுங்காணொளிகளில் மனம் நின்றுபோய் ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது.
இருந்தாலும், நூலகத்தில் இருந்து எடுத்து மேசை மேல் இருக்கும் நூலைப் பார்க்கும் போதெல்லாம், வேள்பாரி படிக்கும் காலங்களில், அதிலேயே மூழ்கிப் போய், சாலையெங்கும் சிரித்துக் கொண்டே வண்டி ஓட்டியதும், பணிகளில் மனம் ஒட்டாமல் கஷ்டப் பட்டதும் நினைவுக்கு வந்தது. இருக்கட்டும். இதையும் படிப்போம் என்று ஆரம்பித்தேன்.
பா.ராகவன், அவரது ஒரு கதாப்பாத்திரம் சொல்வது போல, ஒரு மொழியின் குழந்தை. அவரை நேரில் பார்த்தால் குழந்தை மனம் கொண்டிருப்பவர் போல இருப்பார். எழுத ஆரம்பித்தால் இராட்சராக, பேயாக, பூதமாக மாறி விடுவார் போல.
ஒரு மாய உலகைப் படைக்க, இக்காலத்தில் பல நாட்கள் தொடரும் நெடுந்தொடர், இணையத் தொடர், திரைப்படம் வேண்டியுள்ளது. ஆனால், இவரோ வெறும் வார்த்தைகளில் ஒரு பேருலகைப் படைக்கிறார். வார்த்தைகள் அவரது விரல் பட்டு புது உலகைப் படைத்து விடுகின்றன.
எந்த பெரு நாவலிலும் வரும் அதிர்ச்சிகள், நகைச்சுவைகள், இதிலும் உண்டு. கதை என்னவோ துறவறம் பூண்ட ஒரே குடும்பத்தின் நான்கு சகோதரர்கள் பற்றித்தான். ஆனால், அன்பும், பாசமும், வேட்கையும், காதலும் எல்லாமே துறவின் பல்வேறு நிலைகள் என்றே உணர்வோம்.
இந்தியாவில் துறவு பல காலமாகவே இயல்பான ஒன்று. ஆனால்,
துறவு நேரிடும் வீட்டில் ஏற்படும் துயர் வாழ்நாள் முழுதும் நீடிக்கும் ஒன்று. விட்டு ஓடியவருக்கு உலகமே வீடுதான். வீட்டில் உள்ளோருக்கு என்றும் துயரே. ஆயினும் நடப்பதை ஏற்பதே வாழ்வு.
நான்கு சகோதர துறவிகளுள் ஒருவரின் சுயசரிதை போல் விரியும் நாவல், முதல் பக்கத்திலேயே நம்மையும் அவர்கள் வாழ்வுக்குள் இழுத்து விடுகிறது.
தேன் உண்ணும் தேனி பூவில் மயங்கிக் கிடப்பது போல, வார்த்தைகள் விரிக்கும் வாழ்வில் மயங்கி விடுவோம். திடீர்த் திருப்பங்கள், சித்து வேலைகள், பேய்கள், பல்வேறு சித்தர்கள், அரசியல் வாதிகள், கொலைகள், மரணம் என பல்வேறு உலகங்களில் வாழ்ந்து விட்டு வரலாம்.
பெரிதாக மதக் கருத்துகள், போதனைகள், பரப்புரைகள் ஏதுமில்லாதது வியப்பு. துறவிகளின் கதைகள், பெரும்பாலும் கடவுள் பக்தி, ஆன்மிகம், சித்து வேலைகளின் மீதான பிரமிப்பை ஏற்படுத்தும். ஆனால் யதி, துறவிகளின் உலகை அருகே சென்று காட்டி, வாழ்வின் அபத்தங்களையும் ருசியையும் சுவைக்கச் செய்கிறது.
ஒரு நிமிட குறுங்காணொளிகளில் சிக்கியிருந்த காலத்தில், இப் பெருநாவல் படிக்கும் பேரனுபவம் மிக இனிது. புதுப்புது திருப்பங்கள், எதையும் சாத்தியப் படுத்தும் சித்து வேலைகள், அறிவியலுக்கு முற்றிலும் எதிரான நிகழ்வுகள் என நிஜ உலகையும் மாயங்களையும் பிணைந்து பல்வேறு வாழ்வுகள் வாழ்ந்த அனுபவம் கிட்டுகிறது.
அடுத்த முறை ஒரு துறவியை காணும் போது, அவர் மேலிருக்கும் பிரமிப்பு நீங்கி, அவரது துறவு நோக்கம் நிறைவேற வாழ்த்துவோம்.
துறவறம் கிட்டாமல் போய், பின் எழுத்தாளராக மாறியதாக பா.ராகவன் எழுதியுள்ளார். எனக்கென்னவோ அவர் எழுத்துப்பணியே அவரை துறவியாகத்தான் வாழ வைத்திருக்கிறது. என்ன அதை அவர் கர்மயோகம் என்பார்.
தன் எழுத்து வேலையின் மீது தீராக் காதல் கொண்டு, அதன் பலன்களை வாசகர்களுக்கு தாரை வார்த்து விடும் யோகியாகவே அவரைக் காண்கிறேன்.
தமிழில் ஒரே ஒரு முறை மட்டுமே பூக்கும் அதிசயப் பூ இந்த யதி.
படிக்கத் தவறாதீர்.
Friday, June 30, 2023
யதி - வாசிப்பு அனுபவம்
Subscribe to:
Posts (Atom)