ஐ. ஜாலி! போன வருடம் மாதிரியே நிறைய வாங்கித் தரணும். ஆனால் என் நண்பர்கள் எல்லோரும் ஏற்கெனவே போய் வந்து விட்டனர்.
அதனால் என்ன? நீ, நான், இயல் மூவரும் போகலாம்.
அவன் ரொம்ப குட்டி. இரண்டு வருடங்கள் கழித்து அவனையும் கூட்டிச் செல்லலாம்.
===
நேற்று காலையில் திட்டமிட்டு, வீட்டு வேலைகளை முடித்து விட்டு, கிளம்புவதற்கு மதியம் 3 ஆகிவிட்டது. இரயிலில் சென்று புத்தகத் திருவிழாவை சென்றடைய 4 ஆகிவிட்டது.
சுமார் 10 வருடங்களாக தவறாமல் செல்லும் திருவிழா இது. பணம் இல்லாத காலங்களில் சும்மா பார்ப்பதற்கே அங்கே போன காலங்கள் உண்டு. வாசிப்பது இனிய அனுபவம் எனில், புத்தகங்களை வாசிப்பவர்களை, அவற்றை தேடுபவர்களை, அவை பற்றி பேசுபவர்களைப் பார்த்தல் பேரனுபவம்.
ஏனோ, இம்முறை பபாசியின் முறைகெட்ட அரசியல் செயல்பாடுகளால், அரசை விமரிசிக்கும் புத்தகங்கள் எழுதி விற்றதற்காக, திரு. அன்பழகன் அவர்களை அரங்கை காலிசெய்ய வைத்து, கைது செய்ய வைத்த நிகழ்ச்சி, பெரும் வருத்தம் தந்ததால்,அங்கு போகும் ஆர்வம் ஏற்படவில்லை.
ஆயினும், குழந்தைகளின் கொண்டாட்ட நிகழ்வை மறுக்க இயலவில்லை. இரயில் முழுதும் போன ஆண்டு புத்தகத் திருவிழா நினைவுகள், வாங்கிய புத்தகங்களின் கதைகள், இந்த ஆண்டு வாங்க வேண்டிய நூல்களின் பட்டியல் என்று வியன் அடுக்கித் தள்ளினான். இயலுக்கு முதல் புத்தகத் திருவிழா. அவளுக்கு புத்தகத் திருவிழாவை வியன் விளக்கினான்.
'நிறைய தெருக்கள் இருக்கும். எல்லாத் தெருவிலும் புத்தகம் விற்கும். நமக்கு பிடித்த புக்ஸை எடுத்துக் கொள்ளலாம். அப்பாவிடம் அவர்கள் காசு வாங்கிக் கொள்வார்கள். பெரிய அப்பளம், பலூன், சோப்பு பபூல் என்று எக்கச்சக பரிசுகள் கிடைக்கும்'.
அவளும் ஆவலுடன் கேட்டுக்கொண்டே வந்தாள்.
முதலில் அவர்களுக்கான புத்தகங்களை வாங்க முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். இறுதி வரை அவர்களுக்காக மட்டுமே வாங்க முடிந்தது.
புத்தகக் கடலில் இருவரும் மூழ்கி அவர்களுக்கான முத்துக்களை தேடி எடுத்தனர்.
அவர்களுக்கானவற்றை வாங்கியபின், ஆழி பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் இரண்டுக்கு மட்டும் சென்று இளவழகன் ஐயா அவர்களையும், அண்ணன் ஆழி செந்தில்நாதன் அவர்களையும் சந்தித்தோம்.
தமிழ்மண் பதிப்பகத்தில் (அரங்கு 231) இலங்கையில் பதிப்பிக்கப் பட்ட அட்டகாசமான தமிழ் சிறார் நூல்கள் கிடைக்கின்றன. வேறு எங்கும் கிடைக்காது. தவற விடாதீர்கள். அவர் அளித்த அன்புப் பரிசுகளுக்கு பெரு நன்றிகள்.
இவையே நாங்கள் வாங்கியவை.
என்னதான் இம்முறை புத்தகம் வாங்க வேண்டாம் என்று முடிவு எடுத்தாலும், நம்மை கை சும்மா இருக்காதே. இம்முறை இந்த மூன்று நூல்கள் மட்டும் வாங்கினேன்.
அச்சு நூல்கள் வாங்குவதை பெருமளவு குறைத்து, கிண்டிலில் நிறையப் படிக்கிறேன். வாங்கும் அச்சு நூல்களையும் கூடிய விரைவில் படித்து விட்டு அருகில் உள்ள நூலகத்துக்கு தருகிறேன்.
===
குழந்தைகளுக்கு என்றுமே நூல்கள் புது உலகங்களைத் திறந்து விடுகின்றன. வண்ண கெட்டி அட்டைகள், கார்ட்டூன்கள், காமிக்சுகள், என்று அவர்களின் தேடல்களை அவர்களையே செய்யவிட்டால், நாம் நினைப்பதை விட அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.
வியனுக்கும் இயலுக்கும் தொலைக்காட்சி, கைபேசிகளை விட அதிகமாக புத்தகங்களையே கொடுத்து வருகிறோம். அவர்களது கற்பனையும் திறமைகளும் இந்த புத்தகங்களால் அதிகரிப்பதைக் கண்டு மகிழ்கிறோம்.
சில மாதங்கள் இனி புது நூல்களோடு மகிழ்ச்சியாகக் கழியும்.
===
நீங்களும் புத்தகங்களோடு அதிக நேரம் செலவிடுங்கள். இனிய தருணங்களை உருவாக்குங்கள்.