சென்னை, கிழக்கு தாம்பரம் அகத்தி தோட்டத்தில் நம்ம சந்தையின் நான்காவது நிகழ்வு, அக்டோபர் 15, 2017 அன்று நடந்தது.
'பூவுலகின் நண்பர்கள்' குழுவின் திரு.சுந்தர்ராஜன் அவர்கள் முதலில் பேசினார். புவிக்கு மனிதர்கள் உண்டாக்கும் கேடுகள் பற்றி நிறைய உதாரணங்களோடு பேசினார். உதகை, கொடைக்கானலின் தேயிலைத் தோட்டங்கள், பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள், ஏரிகளின் மீதான கட்டடங்கள், சென்னை வெள்ளத்தின் காரணங்கள், நதி நீரோட்டம், நதிகள் கடலில் கலப்பதின் தேவைகள், அணைகளால் ஏற்படும் சிக்கல்கள், நதிகளை இணைப்பதில் உள்ள அபாயங்கள் பற்றி எடுத்துரைத்தார்.
பிறகு, திருமதி. நித்யா, கரகாட்டம் பற்றி பேசினார். தமிழரின் கலைகளுள் ஒன்றான கரகாட்டம், பரதம் போன்றே பழம்பெருமையும் புனிதமும் கொண்ட ஒன்று என்றும், எளியோர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் ஆதரவு தந்து சபாக்கள், நடன இயக்கங்கள் போன்ற இடங்களில் அரங்கேற்றம் செய்ய உதவி புரிய வேண்டினார். பிறகு அவரது கரகாட்ட நடனம் தொடங்கியது.
அவரைத் தொடர்ந்து, அவருடனே கரகாட்டம் கற்கும் 65 வயது இளைஞர் திரு. தணிகாசலம் அவர்களின் கரகாட்டம், பார்வையாளர்களை பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. எதையும் கற்றுக் கொள்ள, வயது ஒரு பொருட்டல்ல என்பதை உணர முடிந்தது.
பார்வையாளர்கள் பலரும் கரகத்தை தம் தலையில் வைத்து ஆட முயன்று மகிழ்ந்தனர்.
பிறகு, 'உடலே மருத்துவர்' என்ற தலைப்பில் வானகத்தில் இருந்து வந்த தோழர். சிவகாமி அவர்கள் பேசினார். சரியான உணவு, சரியான தூக்கம், நல்ல உழைப்பு இவையே ஆரோக்கியத்திற்கு அடிப்படை. கடைகளில் தயாராகும் திடீர் உணவுகளை விட, வீட்டு உணவே உடலுக்கு நல்லது. சாதாரண சளி, இருமல், காய்ச்சல் ஆகியவற்றுக்கு உடனே மருத்துமனை நாடாமல், ஓரிரு நாட்கள் பொறுத்தால், அவை தானாகவே சரியாகி விடும் என்றார். [ பெருவியாதிகள், தொற்றுநோய்களுக்கு மருத்துவரின் ஆலோசனை அவசியம்].
பிறகு பேசிய பானுசித்ரா, தீபா இருவரும் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் உடல், மனச் சிக்கல்கள்களை விளக்கினர். ஆண்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வதில் அவசியம், குடும்பத்தினர் தர வேண்டிய ஆதரவு, துணியாலான நாப்கின்களின் பயன்கள் பற்றிப் பேசினர் .
சிறுதானிய மதிய உணவுக்குப் பின், பனைப் பொருளாதாரம், பனைப் பொருட்கள், பனையின் அழிவு, காக்க வேண்டிய தேவை பற்றி 'சுதேசி இயக்கத்தின்' நம்பி ஐயா அவர்கள் பேசினார்.
தோழர் காக்ஸ்டன் அவர்கள், தமிழ்நாடு முழுதுமான தனது பயணங்கள், தற்சார்பு, விவசாயப் பொருளாதாரம் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்தார்.
மாணவர் சரவணன் அவர்கள், குறைந்து வரும் தமது பார்வை பற்றியும், பார்வையற்றோருக்கான முன்னேற்ற வாய்ப்புகள் பற்றியும் பேசினார்.
திரு. தணிகாசலம், திருமதி. சாந்தி மேரி மற்றும் சிலர், நிகழ்வு பற்றிய கருத்துகளையும், நன்றியும் கூற, இனிதே நிகழ்வு நிறைவடைந்தது.
சந்தையில் பல்வேறு கடைகள் இருந்தன. இயற்கை விவசாயப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்கின்றனர். மரச்செக்கு எண்ணெய், பனங்கருப்பட்டி, அவல், சிறுதானிய சத்துமாவு, துணி நாப்கின், பனைத் தின்பண்டங்கள், சிறு தானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், மண்பாண்டங்கள், கைவினைப் பொருட்கள், புத்தகங்கள், கீரைகள் என பல்வேறு பொருட்கள் விற்கப்பட்டன. ஆர்வமுடன் வாங்கி ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றிகள்.
இன்னொரு பகுதியில், சிறார்களுக்காக விளையாட்டுகளுடன், வீட்டுத் தோட்டம் அமைக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. வழக்கறிஞர் சக்திவேல் இலவச சட்ட ஆலோசனைகளை வழங்கினார். மேலும் அக்குபஞ்சர், சித்த மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
விற்பனை மட்டுமே நடக்கும் சந்தையாக மட்டுமின்றி, பல்வேறு நிகழ்வுகளுடன், பல சிந்தனைகளைத் தூண்டும் நிகழ்வாக அமைந்திருந்தது. ஏற்பாடு செய்த நண்பர்களுக்கும், கருத்தாளர்களுக்கும், வருகை புரிந்தோருக்கும் நன்றிகள்.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிறு அன்று நடக்கும் இந்நிகழ்விற்கு, ஏற்பாடு செய்தல், இடம் தயாரித்தல்,சுத்தம் செய்தல், உணவு தயாரித்தல், பரப்புரை செய்தல் என பல்வேறு பணிகள் உள்ளன. இவற்றுல் ஏதேனும் ஒன்றை தன்னார்வப் பணியாக செய்ய உங்களையும் அழைக்கிறோம். நீங்களும் ஏதேனும் ஒரு வகையில் உதவ இயலுமெனில் எங்களை அழையுங்கள். மணி - 9840890168 , இளவரசு - 9940258184, தீபா - 9042023090
குறிப்பு -
1. அடுத்த சந்தையில் நலிவடைந்த இயற்கை வேளாண் விவசாயிகளை தத்தெடுக்கும் திட்டம் அறிவிக்கப் பட உள்ளது. முதல் கட்டமாக விழுப்புரம் விவசாயி திரு. பாண்டியன் அவர்களுக்கு உதவ அழைக்கிறோம்.
2. நஞ்சில்லா வீட்டு உபயோகப் பொருட்கள், துணியாலான அணையாடைகள் செய்யும் பயிற்சித் திட்டங்களும் அறிவிக்கப் பட உள்ளன.
கரகாட்டம் முதலிய தமிழர் கலைகள் கற்க -சுக்ரா டான்ஸ், மாடம்பாக்கம், சென்னை - +(91)-9600366010, 9500555737
அகத்தி தோட்டத்தில் உரையாடலாம் வாருங்கள்.
மேலும் சில படங்கள் இங்கே - https://photos.app.goo.gl/c8xCyvBfOlFGRcED3