Tuesday, December 09, 2025

டொரோண்டோ தமிழ்ப் புத்தக அரங்கம் 2025

புத்தகம் 

தமிழ்நாட்டில் புத்தகங்களோடு வளர்த்த எனக்கு, புத்தகக் கண்காட்சிகளே பெரும் திருவிழாக்கள். சென்னையின் புத்தகத் திருவிழாக்களின் போது, அங்கேயே தங்கிவிடலாம் எனும் அளவுக்கு பேராசை இருக்கும். புத்தகங்களை வாங்குவது, அவற்றின் வாசம் நுகர்வது, எழுத்துகள் காட்டும் தனி உலகில் தனியே சஞ்சரித்து மகிழ்வது போன்ற பல்வேறு வியாதிகள் எனக்கு உண்டு. 'டம்மி வாசகன்' என்று புது கல்யாண குணங்களும் சேர்ந்து விடுகிறது.

சிலருக்கு சினிமா. சிலருக்கு கிரிக்கெட். சிலபேருக்கு கோயில். எனக்கு புத்தகம்.

கனடாவில் தமிழ்ப் புத்தக கண்காட்சி

மூன்று ஆண்டுகளுக்கு முன் கனடா வந்த பின், இங்கு அதிகம் கிடைக்காமல் போனவை புத்தகங்களே. இறக்குமதி செலவும் அதிகம். யாராவது சென்னையில் இருந்து வந்தால், தம்பி சுரேஷ் மூலம் நூல்கள் வாங்கி, அனுப்பும் வைபவமும் நடக்கும்.

கிண்டில், கோபோ, இங்குள்ள நூலகங்கள் மூன்றுமே பெரு வரம். இருந்தாலும், 'ஆடின காலும், பாடின வாயும்' போல, புத்தகம் வாங்கிய கையும். ஸ்கார்புரோ நகர் என்பது கனடாவின் மதுரை. பல்வேறு சங்கங்கள், அமைப்புகள் மூலம், நாளொரு புத்தக வெளியீடும், பொழுதொரு இலக்கிய சந்திப்பும் நிறைந்த ஊர் இது. இங்கு வாழும் இலங்கைத் தமிழர்கள் தமிழை வளர்த்து வருகின்றனர். மொழிக்கான அவர்கள் தரும் உழைப்பு, நேரம், பொருள் பெரிதும் வியப்பு அளிப்பது. 

அவ்வப்போது, சில புத்தக விற்பனையாளர்கள் இங்கு கண்காட்சி நடத்துவர். என் வீட்டில் இருந்து வெகு தூரம். எனவே சில அரிதான நிகழ்வுகளுக்கே செல்ல முடிந்தது.

https://torontotamilbookfair.com/wp-content/uploads/2025/11/Toronto-Tamil-Book-Fair.png 

நல்வாய்ப்பாக, இந்த ஆண்டு 6,7 டிசம்பர் 2025  இருநாட்கள் நடந்த கண்காட்சியில் கலந்து கொள்ள முடிந்தது. காரின் சாரதியாக நித்யா இருக்கையில், எனது வேலை இருக்கையில் அமர்ந்து போக வேண்டிய இடத்தின் பெயர் சொல்வது மட்டுமே. ஐவரும் இருநாட்களும் திருவிழாவில் கலந்து கொண்டோம்.
 

டொரோண்டோ தமிழ்ப் புத்தக அரங்கம் 2025

கனடியத் தமிழர் பேரவை (CTC) மற்றும் ஐக்கிய இலங்கை முஸ்லிம் பேரவை – கனடா (USLMCC) இணைந்து மதம், இனப்பாகுபாடு, பின்னணி, வேறுபட்ட நம்பிக்கைகளைத் தாண்டி தமிழ்மொழியை ஒன்றுபட்ட உணர்வுடன் நடத்திய திருவிழாவில், 20 சிற்றரங்குகள், ஒரு பெரிய மேடையுடன் கூடிய பேச்சரங்கு. மேடையில் புத்தக வெளியீடுகள், நூல் அறிமுக உரைகள், கலை நிகழ்ச்சிகள், பாடல்கள், நாடகம், வில்லுப்பாட்டு என்று விழா களைகட்டியது.

நிகழ்வில், யாரைப் பார்த்தாலும், ஆசிரியராகவோ, எழுத்தாளராகவோ, பதிப்பாளராகவோ, நூல் விமர்சகராகவோ, ஆராய்ச்சியாளராகவோ இருந்தது பேரனுபவம். அறிஞர்கள் நிறைந்த அவை.

பல வகை நூல்களை ஒரே இடத்தில் பார்த்து, பூந்தோட்டத்தில் சிக்கிய வண்டு போல மயங்கிக் கிடந்தேன். மகன் வியன் ஒரு புறம் நூல்களை வாங்கி அடுக்க, இயல், பாரி இருவரும் சிறார் நூல்களை அள்ள, சென்னையின் புத்தகத் திருவிழா நாட்களை மீண்டும் வாழத்தொடங்கினேன்.

பழைய நண்பர்கள், புது நண்பர்கள், பல காலம் பெயர் அறிந்து நேரில் கண்டவர்கள் என பலரையும் ஒருங்கே கண்டது இனிமை.

ஒரே சிக்கல் தான் இப்போது எனக்கு. அடுத்த நூல்கள் வாங்கும் முன் இருப்பவற்றை படித்து விட வேண்டும். இது நித்யாவின் கட்டளை. கட்டளையே சாசனம்.

உறவுகளையும் உடன் வளர்ந்த நட்புகளையும் விட்டு வெகு தூரம் இருந்தாலும், தமிழ் நூல்கள் நிரம்பிய சூழல் மட்டுமே மகிழ்ச்சியும் நிறைவும் தருகிறது.
வீட்டின் புத்தக அலமாரிகள் நிரப்பி, எங்கள் அடுக்ககத்தின் பொதுவான ஒரு அறையின் அலமாரிகளிலும் புத்தகங்களை நிரப்பி வருகிறேன். புத்தகங்கள் சூழ வாழ்தல் இனிது. அவற்றை தினமும் படிப்பதே அதனினும் இனிது என்கிறார் நித்யா.

பார்ப்போம். அனைத்தையும் படிப்பது இலட்சியம். பாதியாவது முடிப்பது நிச்சயம்.

திருவிழாவில் குறளங்காடி, ஐபாட்டி, வடலி சிற்றரங்குகளில் தமிழ் கற்கும் விளையாட்டுகளை வாங்கினோம். இயல், பாரி உடனான குளிர்கால சிறார் விளையாட்டுகள் இனி தமிழோடு. 


எழுத்துல சூப்பர் ஸ்டார் அ. முத்துலிங்கம் அவர்களது 70 ஆண்டுகால எழுத்து, படைப்பு பணி குறித்துப் பேசும் ஒரு சிறப்பு நூல் -   "அ.முத்துலிங்கத்தின் எழுத்துலகு" வெளியிடப்பட்டது. மேடைக்கு சென்று நூலைப் பெற்றுக் கொண்டது இனிய அனுபவம். வாய்ப்பு அளித்த பேராசிரியர் இரா. செல்வகுமார், எழுநா முரளிதரன் ஆகியோருக்கு நன்றிகள்.


வரும் போது எங்களோடு காரில் வர இசைந்த எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களுக்கு நன்றி. அவரது சிறப்புரை சிறப்பு. பொதுவான உரையாடல்களிலும் அவரது எளிமையும் இனிமையும் ஆச்சரியம் தந்தன. எனது நூல்கள், நூலகம் சார்ந்த கனவுகளையும் புலம்பல்களையும் சிரித்துக் கொண்டே கேட்டு வந்தார்.

நண்பர்கள் சுகந்தன், ஐஸ்வர்யா, சாய்ராம், நூலகம் அறக்கட்டளை நண்பர்கள், காலம் செல்வம், வெங்கட் வெங்கட்ரங்கன், இளங்கோ, மாலினி, மார்கெரட், எழுநா முரளிதரன், பிரபு, சிவன் இளங்கோ, அகணி சுரேஸ், ரூபன் ஆகியோரைக் கண்டு பேசிய தருணங்கள் மகிழ்வானவை.


முதல் முறையாக புத்தகம் வெளியிட்ட துளிர் எழுத்தாளர்கள், முதல் முறையாக கடை விரித்த விற்பனையாளர்கள், முதல் முறையாக புத்தகத் திருவிழா வந்த சிறார்கள், பேரனுபவம் மிக்கோர் என பலருக்கும் பேரனுபவங்களை தந்திருக்கும் இந்தத் திருவிழா.

சிறியவர்களும் பெரியவர்களுமாக புத்தகங்களைத் தேடித்தேடி எடுத்து வாங்குவதைக் காண்பது பெரு மகிழ்ச்சி.

            




உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

என்பதை நேரில் அனைவரும் உணர்ந்தோம்.

பல்வேறு பெரும் பணிகளுக்கு இடையே, பல மாதங்கள் திட்டமிட்டு, சிறப்பாக நிகழ்வை நடத்திய விழாக்குழுவினருக்கு பல்லாயிரம் நன்றிகள். தொடர்ந்து ஆண்டுதோறும் இது போன்ற புத்தக திருவிழாக்களை நடத்தி வர வேண்டுகிறேன்.

பல ஆண்டுகளாக கலந்து கொள்ளும் புத்தகத் திருவிழாவில் அப்படி என்னதான் கிடைக்கிறது என்று யோசிக்கிறேன். நமக்கு இருக்கும் ஒரு அதீத கிறுக்குத்தனம், பலருக்கும் இருப்பதை அறிவதும், அவர்களை ஒரே இடத்தில் காண்பதால் கிடைக்கும் மகிழ்ச்சியும்தான் கிடைக்கிறது.

கண்ணில் காணும் எழுத்துகள், மூளைக்குள் நடத்தும் மாயாஜாலங்களை அனுபவிப்பது பேரின்பம். அது போதும் இப்பிறவிக்கு.


படங்களும் காணொளிகளும்

நான் சுட்ட படங்கள்

https://photos.app.goo.gl/QPHDeBNFZEbqipEt9


தொடக்க விழாத் தருணங்கள் -  ஐயா புகைப்படக் குழு
https://iyah4u.smugmug.com/PublicEvents/2025Events/6-Dec-2025-Toronto-Tamil-Book-Fair-2025/i-smR6VMT


நடந்தவையும் நடக்கபோகின்றவையும்
https://www.youtube.com/watch?v=SrEydO8JDTQ

தமிழ் முன்னோடி தமிழேந்தி அப்பாவின் கனவு | தூய தமிழ் பெயர்கள் 
https://www.youtube.com/watch?v=3CmI0utJfPg